Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடுமலை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் கொல்லப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு என முதல்வர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேல்-ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை நிகழ்ந்த இடத்தில் ஐ.ஜி. செந்தில்குமார் ஆய்வு செய்துவருகிறார்.