Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு

திருப்பூர்: உடுமலை அருகே அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் நேற்று எஸ்.ஐ-யை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழ்ந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூத்து என்ற கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த தங்கப்பாண்டியன் (32) தனது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தை மூர்த்தி (65) ஆகியோருடன் தோட்டத்து வீட்டில் தங்கி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவில் தந்தை, இரு மகன்களுக்கிடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதில் மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குடிமங்கலம் காவல்துறைக்கு போனில் தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் (58)க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, ஆயுதப்படை காவலர் அழகு ராஜாவுடன் தோட்டத்திற்கு ரோந்து ஜீப்பில் சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் சண்முகவேலுவை நெற்றி மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். மேலும், தோட்டத்து மேலாளர் கனகராஜ், தோட்ட கூலித் தொழிலாளர் இருவரையும், ஆயுதப்படை காவலர் அழகுராஜாவையும் மணிகண்டன் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் உயிரிழந்தார்.

இதனை அடுத்து எஸ்எஸ்ஐயை வெட்டி கொன்ற வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மூத்த மகன் தங்கப்பாண்டி (32) ஆகியோர் திருப்பூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். இருவரையும் மேல் விசாரணைக்காக உடுமலைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மணிகண்டனை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை போலீசார் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து உதவி காவல் ஆய்வாளரை தாக்கி தப்ப முயன்றுள்ளார். அப்போது போலீசார் நடத்திய துப்பக்கிசூட்டில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.