சிகப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கு : தவெக கட்சிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!!
சென்னை : .சிகப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியைப் பயன்படுத்தத் தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனர் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை, தமிழக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ள கொடி உருவாக்கப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு வர்த்தக முத்திரைக்கான பதிவு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே பதிவு செய்த குறிப்பிட்ட நிறங்களை கொண்ட கொடியை பயன்படுத்த உரிமை உள்ளது.
இந்த நிலையில் தவெக கட்சி கடந்த 2024ம் ஆண்டு தொடங்கப்பட்டு கட்சியின் கொடியை அறிமுகம் செய்தது. அதில் சிகப்பு, மஞ்சள், சிகப்பு நிறங்கள் இடம் பெற்றிருந்தது. எனவே, தவெக கட்சி கொடியில் உள்ள வர்ணங்களை நீக்குமாறு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்குத் தானே பொருந்தும், எப்படி அரசியல் கட்சியின் கொடிக்குப் பொருந்தும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வர்த்தக முத்திரை என்பது சரக்கு மட்டுமல்லாமல் சேவைக்கும் பொருந்தும் என்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வர்த்தக முத்திரை பொருந்தும் என்றும் விளக்கம் அளித்தார்.இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் மற்றும் அந்தக் கட்சியின் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே தவெக கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.