Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இங்கிலாந்துடன் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம்; இந்திய பொருட்களுக்கு வரி ரத்து: பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்து

லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பிரதமர்கள் மோடி - கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வேளாண் பொருட்கள், மீன், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு முற்றிலும் வரி நீக்கப்பட்டுள்ளது. இதே போல இங்கிலாந்தின் கார், மதுபானங்களுக்கு சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், பிரதமர்கள் மோடி, ஸ்டார்மர் முன்னிலையில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

கடந்த 3 ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த மெகா ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பல நூறு கோடி மதிப்பீட்டில் வர்த்தகம் அதிகரிக்கும். இங்கிலாந்தில் அனைத்துத் துறைகளிலும் இந்தியப் பொருட்களுக்கு விரிவான சந்தை அணுகல் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களில் 100 சதவீத வர்த்தக மதிப்புகளை உள்ளடக்கிய வேளாண், மீன், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் 99 சதவீத பொருட்களுக்கு முற்றிலும் வரி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மஞ்சள், மிளகு, ஏலக்காய் போன்ற இந்திய முக்கிய வேளாண் பொருட்கள், மாம்பழ கூழ், ஊறுகாய், பருப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் இறால் மற்றும் டுனா போன்ற மீன் உணவுகள் இங்கிலாந்து சந்தையில் சுங்க வரி இல்லாத அணுகலை பெறும். இது அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய ஏற்றுமதியை 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 100 பில்லியன் அமெரிக்க டாலர் விவசாய ஏற்றுமதி இலக்கை அடைவதற்கு பங்களிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

தேயிலை மற்றும் காபி ஆகிய ஏற்றுமதிகளுக்கு முன்பு 10 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி வரி முற்றிலும் நீக்கப்படும். மசாலாப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் மீதான வரிகள் முன்பு 8 சதவீதத்தில் இருந்து இனி பூஜ்யமாக இருக்கும். பழங்கள் முன்னதாக 20 சதவீதம் வரை வரியில் இருந்து பூஜ்ஜியமாக்கப்படும். இது இங்கிலாந்து சந்தையில் இந்திய பொருட்களின் விலையைக் குறைக்க வழிவகுக்கும். இதே போல, இங்கிலாந்தின் உற்பத்தி பொருட்களுக்கான இந்தியாவின் சராசரி வரி 15 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறையும். இதன் மூலம், இந்தியாவிற்கு குளிர்பானங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் முதல் கார்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பொருட்களை விற்பனை செய்யும் இங்கிலாந்து நிறுவனங்கள் இந்திய சந்தையை அதிகளவில் அணுகுவார்கள்.

இந்த ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் கூறுகையில், ‘‘நமது இரு நாடுகளுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகவும், நாம் ஒருவருக்கொருவர் செய்து கொண்ட உறுதிமொழியை நிறைவேற்றும் நாளாகவும் இன்று அமைந்துள்ளது’’ என பிரதமர் மோடியை வாழ்த்தி வரவேற்றார். பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். தற்போது இருநாடுகளும் தங்கள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவு மற்றும் பொறியியல் பொருட்கள் இங்கிலாந்தில் சிறந்த சந்தை அணுகலைப் பெறும். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா, பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை வைத்து நட்பை விவரித்த மோடி

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இங்கிலாந்தும், கிரிக்கெட்டை வெறித்தனமாக ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நாடாக இந்தியாவும் இருக்கும் நிலையில், கிரிக்கெட்டை உருவகப்படுத்தி இரு நாடுகளின் நட்பை பிரதமர் மோடி விவரித்தார். அவர் கூறுகையில், ‘‘எங்கள் இருவருக்கும், கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, அது பேரார்வம். எங்கள் உறவில் சில நேரங்களில் ஊசலாட்டமும் தவறும் இருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் பேட்டை நேராக பிடித்து விளையாடுகிறோம். அதில் அதிக ஸ்கோர் அடித்து, உறுதியான கூட்டாண்மையை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’’ என்றார்.

ஐடி ஊழியர்களுக்கு சலுகை

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இங்கிலாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை ஆதரிக்க இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஊழியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை தேசிய காப்பீட்டு பங்களிப்புக்கான விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஓராண்டாக உள்ளது. இதனால், 75,000க்கும் மேற்பட்ட இந்திய ஊழியர்களும், 900க்கும் மேற்பட்ட நிறுவன உரிமையாளர்களும் பலனடைவார்கள்.

காலிஸ்தான் ஆதரவு: மோடி எச்சரிக்கை

தீவிரவாத சித்தாந்தங்களைக் கொண்ட சக்திகள் ஜனநாயக சுதந்திரங்களை தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் மோடி,பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மரை சந்தித்த பின்னர் கூறினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை வலுவாக கண்டித்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மோடி,’பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டைத் தரங்களுக்கு இடமில்லை என்ற எங்கள் கருத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றுபட்டுள்ளன. தீவிரவாத சித்தாந்தங்களைக் கொண்ட சக்திகள் ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ’ என்று தெரிவித்தார். லண்டனில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்தார்.

நீரவ்மோடி, லலித்மோடியை நாடு கடத்த ஒத்துழைப்பு

இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ள பொருளாதார குற்றவாளிகள் விஜய்மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோரை நாடு கடத்த இந்தியா முயற்சித்து வரும் நிலையில், இரு நாடுகளிலும் உள்ள சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் இந்த விஷயத்தில் நெருக்கமான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு?

  • பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மஞ்சள், மிளகு, ஏலக்காய் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவு, மாம்பழ கூழ், ஊறுகாய் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
  •  விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை பூஜ்ஜிய வரியாக்கப்பட்டுள்ளன. பாசுமதி அரிசி, தேயிலை மற்றும் நறுமண மசாலாப் பொருட்களின் இறக்குமதி வரியையும் இங்கிலாந்து குறைக்கவுள்ளது. இதனால், கேரளா, தமிழ்நாடு, அசாம், குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநில விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பயனடைவர்கள்.
  •  இந்தியாவின் கடல்சார் பொருட்கள் மீது முன்பு 20 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் அது பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது. 4.2 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட இறால், சூரை, மீன் உணவு மற்றும் தீவனங்கள் முற்றிலும் வரி இல்லாததாக மாறும்.
  •  இன்ஸ்டன்ட் காபிக்கான வரி நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வணிக நிறுவனங்கள் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து போன்ற பிற ஐரோப்பிய சப்ளையர்களுடன் போட்டியிட உதவும். இங்கிலாந்துக்கு மதிப்பு கூட்டப்பட்ட காபி பொருட்கள், குறிப்பாக இந்திய இன்ஸ்டன்ட் காபியின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு ஊக்கத்தை வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும்.
  •  இந்தியாவின் தோல் மற்றும் காலணிகளுக்கான 16 சதவீத வரிகள் நீக்கப்பட்டுள்ளது.
  •  வரி குறைப்பு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகள் மூலம், இந்திய எண்ணெய் வித்து ஏற்றுமதியாளர்கள் இங்கிலாந்து சந்தையில் அதிக போட்டித்தன்மையுடன் பங்கேற்கலாம். இது அதிக ஏற்றுமதிக்கு வழிவகுக்கும்.
  •  இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு இறக்குமதி வரி இங்கிலாந்தில் 8 முதல் 12 சதவீதமாக உள்ளது. இது முற்றிலும் நீக்கப்பட இருப்பதால் திருப்பூர், சூரத் மற்றும் லூதியானாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் பயன் அடைவர். இங்கிலாந்து ஜவுளி சந்தையில் இதுவரை வங்கதேசம், பாகிஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகள் வரி இல்லாத அணுகலை கொண்டிருந்தன. எனவே, வர்த்தக ஒப்பந்தம் மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் இங்கிலாந்து ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பை 5 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  •  எலக்ட்ரிக் இயந்திரங்கள், இயந்திர உதிரிபாகங்கள், தொழில்சாலை உபகரணங்கள், கட்டுமான இயந்திரங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
  •  இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிச்சலுகை அளிக்க பிரிட்டன் முன் வந்துள்ளது.
  •  கால்பந்து பந்துகள், கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள், ரக்பி பந்துகள் மற்றும் மின்னணு அல்லாத பொம்மைகளின் வரி நீக்கப்பட்டுள்ளது.
  •  இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்கள், ஆப்டிகல் பைபர் கேபிள்கள், இன்வெர்டெர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களுக்கு இங்கிலாந்து வரிகளை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.
  •  பிளாஸ்டிக், பிலிம்கள், தாள்கள், குழாய்கள், பேக்கேஜிங், மேஜைப் பாத்திரங்கள் மற்றும் சமையலறைப் பொருட்களுக்கான வரி நீக்கப்பட்டுள்ளது. இது, ஜெர்மனி, சீனா, அமெரிக்கா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற இங்கிலாந்தின் முக்கிய இறக்குமதி நாடுகளுடன் போட்டியிட இந்தியாவை அனுமதிக்கிறது.
  •  வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கான அம்சங்களும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.