சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-ஐ ஆகஸ்ட் .15-குள் செலுத்துவதாக சென்னை உய்ரநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் கப்பலூர், எட்டூர் வட்டம், சாலைப் புதூர், நாங்குநேரி உள்ளிட்ட 4 சுங்கச் சாவடிகளில் தமிழக அரசு செலுத்த வேண்டிய ரூ.276 கோடி செலுத்தப்படாமல் உள்ளதால் சுங்கச் சாவடிகளை பராமரிக்க முடியவில்லை என இந்நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் இந்த சாலைகளில் அரசு போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வுகான சுங்கச் சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் சுங்கச் சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுடன், போக்குவரத்துத்துறை செயலாளர் கடந்த ஜூலை 11ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் அதே போன்று கட்டண பாக்கியில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் மீதமுள்ள 50 சதவீதத்தை செப்டம்பர் மாதத்துக்குள் செலுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுங்கச் சாவடிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் இயக்கப்படும் பேருந்துகளுக்கு 50சதவீத கட்டணமும் 2 மாவட்டங்களிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு 3ல் 2 பங்கு கட்டணமும் செலுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அது வரை 4 சுங்கச் சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என்ற உத்தரவை நிறுத்திவைத்தும் நீடித்து உத்தரவிட்டார்.