தூத்துக்குடியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விமானநிலையத்தை திறந்து வைத்தார் மோடி: ரூ.4,900 கோடி திட்டப்பணிகளும் தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திரமோடி, நேற்று திறந்து வைத்து, நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையமானது கடந்த 1992ம் ஆண்டு திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 9 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு 672 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒன்றிய அரசிடம் வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வந்தன. இதில் ரூ.381 ேகாடியில் விரிவாக்கப் பணிகள் ரூ. 71 கோடியில் விமான நிலைய வெளி வளாகப்பணிகள், பயணிகளின் வசதிகள் என மொத்தம் ரூ.452 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் திறப்பு விழா மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடக்கும் ஆடிதிருவாதிரை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இரவு மாலத்தீவில் இருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு நேற்று இரவு 7.50 மணிக்கு வந்திறங்கினார். அங்கு அவரை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் எல்.முருகன், ராம்மோகன் நாயுடு, தமிழக அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டிஆர்பி ராஜா, கனிமொழி எம்பி, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உள்பட பலர் வரவேற்றனர். பின்னர், புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய திறப்பு விழா மேடைக்கு வந்தார்.
அங்கு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவு பரிசு வழங்கினார். பின்னர், ரூ.452 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதைத்தொடர்ந்து, விமான நிலையத்தின் முன்புறத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலில், ரூ.4,900 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கிவைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் ரூ.200 கோடி செலவில் சுமார் 5.16 கி.மீ. நீளத்திற்கு 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி- துறைமுக இணைப்புச் சாலை (என்ஹெச் 138), ரூ. 2,350 கோடியில் 50 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தடமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சேத்தியாத்தோப்பு - சோழபுரம் தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 36), தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.285 கோடி மதிப்பில் 6.96 மில்லியன் மெட்ரிக் டன் எடையிலான பொருட்களை கையாளும் மேம்படுத்தப்பட்ட மூன்றாவது வடக்கு சரக்குத்தளத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
மேலும், மதுரை- போடிநாயக்கனூர் மின்சாரமயமாக்கல், இரட்டை ரயில் பாதை திட்டங்கள், நாகர்கோவில் டவுன், கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி, நாகர்கோவில் ஜங்ஷன், திருநெல்வேலி மேலப்பாளையம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதையும் தொடங்கி வைத்தார். மாநிலங்களுக்கு இடையிலான மின்சார பரிமாற்ற அமைப்பை மேம்படுத்தும் பொருட்டு நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாக இருக்கும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க ஏதுவாக மின்சார பரிமாற்ற அமைப்பின் கட்டமைப்பை உருவாக்கும் திட்டமும் ரூ.550 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் 400 கேவி இரட்டை சுற்றுக்கோடு கொண்ட மின்கம்பி தொடரானது கூடங்குளத்தில் இருந்து தூத்துக்குடி-II ஜிஐஎஸ் துணைமின் நிலையம் வரை அமைக்கப்படுகிறது. இதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். விழா நிறைவடைந்ததை தொடர்ந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சிக்கு புறப்பட்டுச்சென்றார்.
* தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் பகுதியில் தூத்துக்குடி விமான நிலையம் 1992ல் திறக்கப்பட்டது.
* இங்கு தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் தினமும் 9 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
* 2021ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வந்தன.
* ரூ.381 கோடியில் விரிவாக்கப் பணிகள் ரூ. 71 கோடியில் விமான நிலைய வெளி வளாகப்பணிகள், பயணிகளின் வசதிகள் என மொத்தம் ரூ.452 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.