தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகில் நம்பர் ஒன் நிறுவனமான வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை ரூ.16 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதிக்கு உட்பட்ட 408 ஏக்கர் பரப்பளவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 2 பணிமனைகள், 2 கிடங்குகள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப் 6, வி.எப் 7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் பணிகள் முடிவடைந்த நிலையில்,
இன்று தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு விற்பனையை தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் திருச்செந்தூரில் அமைந்துள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். அதில், ரூ.32,000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது.