தூத்துக்குடியில் விண்வெளி பூங்கா.. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழிற்வளர்ச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அந்த முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதையடுத்து தொழில் முதலீடுகள் தொடர்பாக முதல்வர் முன்னிலையில் ரூ.32,000 கோடிக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பங்கேற்க விடுத்த அழைப்பை ஏற்று மாநாட்டுக்கு வருகை தந்தவர்களை வரவேற்கிறேன். ரூ.32,554 கோடி தொழில் முதலீடுகள் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டின் தொழிற்வளர்ச்சியை முதன்மையாக கொண்டு திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர்கள் சந்திப்பை தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம். சென்னை, கோவை, ஜப்பான், ஸ்பெயின் என பல இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளோம்.
பல இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தோம். வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து குவிக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. சொன்னதை செய்வோம் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள். தூத்துக்குடியை தொழில்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்து எடுக்கிறார் டி.ஆர்.பி.ராஜா. மதுரை மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழிற்வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1,052 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. அதிக அளவு வேலை வாய்ப்புள்ள தொழிற்சாலைகளை வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் அமைக்கிறோம். வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் தொழில்வளர்ச்சியை அமைப்பதால் மக்களின் வருமானம் அதிகரிக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வரும் கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி உள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 ஸ்பெஷல் அறிவிப்புகள்:
*தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும். விண்வெளித்துறைக்கு தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
*கப்பல்கட்டும் துறையை மேம்படுத்த பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும்.
*முருங்கை ஏற்றுமதி, சாகுபடி கட்டமைப்புக்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரூ.5.59 கோடியில் புதுவசதி மையம் ஏற்படுத்தப்படும்.
*நெல்லையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மண்டல பிரிவு மையம் அமைக்கப்படும். தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.