Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.. ஒரு தலை பட்சமாக செயல்படும் சிபிஐ: ஐகோர்ட் அதிரடி!!

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காகச் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் அளித்த அறிக்கையின் மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றார். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று மனுதாரர் மனு தாக்கல் செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.

அப்போது நீதிபதிகள், மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?, யார் பொறுப்பேற்பார்கள் என்று கேள்விகள் எழுப்பியதுடன் எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்குமாறு மனுதாரர் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடந்தும் இந்த வழக்கில் பலன் இல்லாமல் உள்ளது. சிபிஐ விசாரணை சரியில்லை. சிபிஐ ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்புலம் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. தொழிலதிபர் மக்களுக்கு பாடம் புகட்ட நினைத்துள்ளார். காவல்துறையும் அவர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவு பற்றி எந்த கவலையுமின்றி விசாரணை நடத்தினால் அறிக்கை நியாயமானதாக இருக்காது.

இந்த வழக்கை பொறுத்தவரை அந்த காலகட்டத்தில் சில நபர்கள் மூலம் அரசு அதிகாரிகள் குறிப்பாக காவல்துறை சார்ந்த அதிகாரிகளின் சொத்துக்களின் மதிப்பு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக அவர்களுடைய சொத்துகளை கணக்கிட வேண்டும். அந்த விவரங்களை நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மேலும் இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.