Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம்; ஈராக் வழியாக திருப்பி விடப்பட்ட 16 இந்திய விமானங்கள்: பல நாடுகள் வான்பரப்பை மூடிவிட்டதால் தவிப்பு

புதுடெல்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றம் நிலவுவதால், ஈராக் வழியாக இந்திய விமானங்கள் திருப்பி விடப்படும் நிலையில் பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடிவிட்டதால் விமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமானங்கள் உட்பட சர்வதேச விமானங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லண்டனிலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம், ஈரான் வான்பரப்பில் நுழைந்திருந்தபோது, இஸ்ரேல் அந்நாட்டின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. உடனடியாக ஈரான் தனது வான்பரப்பை மூடியதால், அந்த விமானம் ஈராக் வழியாகத் திருப்பிவிடப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக இந்தியா வந்தடைந்தது. இதேபோல், லண்டன், டொராண்டோ, நியூயார்க் போன்ற நகரங்களுக்குச் சென்றுகொண்டிருந்த 16 ஏர் இந்தியா விமானங்கள் பாதியிலேயே திருப்பி அனுப்பப்பட்டன அல்லது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரானில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, எங்கள் விமானங்கள் திருப்பி விடப்படுகின்றன அல்லது புறப்பட்ட இடத்திற்கே திரும்புகின்றன. இந்த எதிர்பாராத இடையூறுக்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திரும்பத் தர ஏற்பாடு செய்துள்ளோம். அல்லது மாற்று தேதியில் அவர்கள் பயணிக்க இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும்’ என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகமும், அங்குள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல், ஈராக், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டன. உலகின் பல முன்னணி விமான நிறுவனங்கள் டெல் அவிவ் மற்றும் டெஹ்ரானுக்கான தங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தித் திறன்களால் ஏற்படும் அச்சுறுத்தலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.