Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும்: ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் நிலை குறித்தும் வினவினார். அதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தியுள்ளதாகவும், அதில் 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 4 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்சாம் புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன்உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். மகளிர் உதவிக்குழுவினருக்கும் சுய அவர்களின் கடனுதவி அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் தாலுகாவில் மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது என்றும், காஞ்சிபுரம் தாலுக்காவிலும் பயிர் சேதங்கள் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகவும், அதுதவிர தற்காலிகமாக சரி செய்ய வேண்டியது. நிரந்தரமாக கட்டி கொடுக்க வேண்டியது என்று சேதமடைந்த வீடுகளை வகைப்படுத்தி அந்த வீடுகளை எல்லாம் கட்டும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாகவும். சில வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், பாதிப்படைந்த வீடுகளை சீர்செய்திட தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகவும், வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, நிறைய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாகவும். மீதமுள்ள வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாதிப்பு அடைந்த மக்களுக்கு கடன்வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டதாகவும், பாதிப்படைந்த பகுதிகளில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் எல்லாம் வழங்கிட சிறப்பு முகாம் நடத்தி தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்ததாவது; கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 11.455 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், அதில், 1245 வீடுகள் இன்னும் தொடங்காத நிலையில் இருக்கிறது என்றும் தெரிவித்தார். கிராம அளவில் ஒரு அலுவலரை நியமித்துள்ளதாகவும், பஞ்சாயத்து செயலாளர், மேல்நிலை தொட்டி இயக்குபவர் (OHT Operator) ஆகியோருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அப்பணிகளை பார்வையிட வேண்டும் என்ற பொறுப்பு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிகளை முழுவதும் கண்காணிக்கிறார்கள். இக்கூட்டத்தின் நிறைவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது; வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும் என்றும், இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மழைக்காலம் தொடங்கப் போகிறது. ஏரி, குளம், குட்டை, கண்மாய்களையெல்லாம் தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், அந்தப் பணிகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.