Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் காலாவதியான 26 சுங்க சாவடிகளை உடனே மூட வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம்

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலாவதியான 26 சுங்கச் சாவடிகள் உள்ளன. பஞ்சாப் மாநிலத்தை போன்று தமிழக சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இந்த சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். மேலும் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் நீக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டத்தில் இருந்து எம்சாண்ட், ஆற்றுமணல் உள்ளிட்ட பொருட்களை சென்னைக்கு எடுத்து வரும் பொழுது ஆண்டுக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சுங்கவரியாக செலுத்த வேண்டியிருக்கிறது.

இதனால் எங்கள் தொழில் அழிந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிறிய மற்றும் பெரிய வாகனங்களான சாலை வரியை குறைக்க வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி பிரச்னையால் எங்களால் தொழில் நடத்த முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கட்டுமானப் பணிகள், தனியார் குடியிருப்பு கட்டுமானம் போன்றவற்றுக்கு முழுமையாக மணல் கிடைப்பதில்லை. இதனால் கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 8 மாதங்களாக மணல் குவாரிகள் இயங்கவில்லை இதனால் தமிழகம் முழுவதும் பொது மக்கள் சிறிய வீடு கட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்கள்.

தரமற்ற எம்சாண்ட்டை வாங்குவதற்கு பதிலாக ஆற்று மணலை விரும்புகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமான தொழிலுக்கு ஒரு நாளைக்கு 3000 லோடு மணல் தேவைப்படுகிறது. தமிழகம் முழுவதும் 9000 லோடு மணல் தேவைப்படுகிறது. இந்த தொழிலை நம்பி சுமார் 75,000 மணல் லாரி உரிமையாளர்கள், 2 லட்சம் ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எனவே அனைத்து மாவட்டங்களிலும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.