Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சரண்டர் செய்யப்பட மாட்டாது; இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: சு.வெங்கடேசன் எம் பி

சென்னை: தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சரண்டர் செய்யப்பட மாட்டாது! முழுதும் பயன்படுத்தப்படும் என்ற தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு எங்களின் இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன் எம் பி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம் பி தனது சமுக வலைதள பதிவில்:

தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை சரண்டர் செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி நான் கடுமையாக விமர்சித்திருந்தேன்.

தெற்கு ரயில்வே அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் பொதுவான திட்ட கொள்கையை விளக்கி அறிக்கை வெளியிட்டது. அதனையும் நான் விமர்சித்து இருந்தேன். இப்போது தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி இந்த பிரச்சனை தொடர்பாக இரண்டாவது அறிக்கையை (4.6.25) வெளியிட்டிருக்கிறார். அதில் ஊடகங்கள் அறியாமையால் நிதி ஆண்டுக்கு சரண்டர் என்று கூறுகிறார்கள். இந்த காலாண்டு பற்றி தான் தெற்கு ரயில்வே கூறியது. மற்ற காலாண்டுகளில் இவை செயல்படுத்தப்படும் என்று சமாளித்துள்ளார்.

ஆனால் தெற்கு ரயில்வே பொது மேலாளர் எழுதிய கடிதத்தில் 2025-26 நிதியாண்டுக்கு இந்த நிதியை பயன்படுத்த முடியாது என்றும் வேறு ரயில்வேக்கு அந்த நிதியை பயன்படுத்தலாம் என்றும் தான் உள்ளது. நாங்கள் சொன்னது அறியாமையால் அல்ல. தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தில் இருந்ததைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம். தெற்கு ரயில்வேயின் அதிகாரி கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்.

ரயில்வே அமைச்சகமும் தமிழக மற்றும் கேரள வளர்ச்சி திட்டங்களுக்கு 2025-26க்கு ஒரிஜினல் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட படி திட்டமிடலும் செயல்பாடும் இருக்கும் என்று முடிவு செய்திருப்பதாக இப்பொழுது கூறியிருக்கிறது. இது எங்கள் விமர்சனத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்த முடிவை நான் வரவேற்பதோடு இது வெறும் அறிவிப்பாக இல்லாமல் இந்த நிதியை நடைமுறையில் செலவிடவும் தெற்கு ரயில்வேயை வற்புறுத்துகிறேன்.