Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டி20 உலகக் கோப்பை வெற்றி; இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

டெல்லி: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்றதுக்கு இந்திய அணிக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். 9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்தன. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரிட்ஜ்டவுனில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் மல்லுக்கட்டின. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 147 ரன்களுடன் வெற்றியை நெருங்கியது. அந்த பரபரப்பான கட்டத்தில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவின் விக்கெட்டுகளை வீழ்த்தி தடம்புரள வைத்தனர். குறிப்பாக கிளாசென் (52) வீழ்ந்ததும் வெற்றி வாய்ப்பு இந்தியா பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் அவர்களுக்கு (16) ரன் தேவைப்பட்ட போது, ஹர்திக் பாண்ட்யா (8) ரன் மட்டுமே வழங்கி இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார். தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்னில் பணிந்தது.

இதனால் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 2-வது முறையாக கோப்பையை வென்றது. மகுடம் சூடியதும் ரசிகர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், டி 20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் சர்மா, இறுதிப்போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அற்புதமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவையும் பிரதமர் மோடி பாராட்டினார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ராகுல் டிராவிட்டுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி விராட் கோலியிடம் பேசியதாவது: உங்களிடம் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதிப்போட்டியில் உங்களது பேட்டிங்கை அற்புதமாக நங்கூரமிட்டுள்ளீர்கள். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்திருக்கிறீர்கள். டி20 கிரிக்கெட் உங்களை மிஸ் செய்யும், ஆனால் நீங்கள் தொடர்ந்து புதிய தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

ரோகித் சர்மாவிடம் பிரதமர் மோடி பேசியதாவது: நீங்கள் சிறந்த ஆளுமை கொண்டவர். உங்களின் அமைதியான மனநிலை, பேட்டிங் மற்றும் கேப்டன்சிப் ஆகியவை இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. உங்கள் டி20 வாழ்க்கை அன்புடன் நினைவில் இருக்கும். இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.