Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவை ஈஷா யோகா மையம் வரம்புகளை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையம் வரம்புகளை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ், மாயமான தனது மகள்கள் லதா, கீதா ஆகியோரை மீட்டுத்தரக்கோரி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஈஷா யோகா மையம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அதன்படி ஈஷா யோகா மையத்தில் போலீசார் விசாரணையும் நடத்தி முடித்துள்ளார்கள். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஈஷா யோகா மையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஈஷா யோகா மையத்திற்கு எதிராக முன்னதாக இருக்கும் புகார்கள், பதியப்பட்டுள்ள வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க தடையில்லை’ என்று உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் பெண்களின் தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து கடந்த அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ஈஷா யோகா மையம் தான் இந்தியாவிலேயே சிறந்த யோகா மையமாகும். மொத்த கட்டுமானங்களில் 80 சதவீதம் பசுமையாக நிர்வகித்து வருகிறது. தேவைப்பட்டால் அதற்கான ஆதாரங்களை கூட சமர்ப்பிக்கிறோம்’ என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘சுமார் 1.25 லட்சம் சதுர மீட்டர் அளவில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர். ஈஷா யோகா மையம் கல்வி நிறுவனம் அல்ல. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய நோட்டீஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை சிவராத்திரி விடுமுறைக்கு பிறகு பட்டியலிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘உங்கள் கண்முன்னாகத்தான் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டது. இப்பொழுது அந்தக் கட்டுமானம் முழுமையாக முடிந்து விட்டது. ஆனால் தற்போது அது ஆபத்து விளைவிக்கக் கூடியது என சொல்கிறீர்கள். அதை நாங்கள் எப்படி ஏற்பது. பசுமைப் பகுதி குறைவாக இருக்கிறது அல்லது வேறு ஏதேனும் பிரச்னை என்றால் அதை சரி செய்ய பாருங்கள். உங்கள் கண் முன்பாகவே கட்டி எழுப்பப்பட்ட கட்டிடத்தை திடீரென நீங்கள் இடிக்க கேட்பதால் அதை அனுமதிக்க முடியாது. மேலும் ஈஷா யோகா மையம் எப்படி கல்வி நிலையம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. இருப்பினும் ஈஷா யோகா அதற்கான வரம்புகளை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கான உரிய ஆதாரங்களை அவர்கள் வழங்க வேண்டும். இருப்பினும் அந்த கட்டிடத்தை இடிப்பதை ஏற்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.