Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உலகில் உள்ள எந்த ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதே சமயம், வரைவு வக்காளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கக் கூடிய சூழலில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன்படி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (Special Intensive Revision - SIR) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பீகாரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

இவர்கள் தற்போது வெளிமாநிலங்களில் உள்ள நிலையில் அவர்களின் பெயர்கள் நீக்குவது, பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையலாம் என்பது இந்தியா கூட்டணி கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு தடை விதிக்க மறுத்தது. அதுமட்டுமின்றி வாக்காளர் திருத்த பணிக்கு ஆதாரை ஆவணமாக ஏற்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திடம் கூறியிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் ஆகிய இரண்டையும் ஆவணமாக சேர்க்க வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறியது.

மேலும் இந்த உலகத்தில் எந்த ஒரு ஆவணத்தையும் போலியாக உருவாக்க முடியும், ஆவணங்களில் எதுவும் பிரச்சனை இருந்தால் தனிநபருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கலாம். ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

பெரிய அளவில் வாக்காளர்களை நீக்குவதை விட பெரிய அளவில் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம் அதேவேளையில், வரைவு வக்காளர் பட்டியலை வெளியிட தடை விதிக்க மறுத்துவிட்டது.