Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலையில் விரைவில் புதிய விசிட்டர் சிஸ்டம் வருகிறது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை அடுத்து, பல்கலை வளாகத்துக்குள் வரும் நபர்களிடம் கியூஆர் கோடு-டன் கூடிய விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் கொண்டு வர அண்ணா பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அண்ணா பல்கலை வளாகத்துக்குள் நுழைவோரிடம் உரிய அடையாள ஆவணங்கள் கேட்கப்படுகிறது. மேலும் பல கட்டுப்பாடுகளை பல்கலைக் கழகம் கொண்டு வந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக புதியதாக விசிட்டர் சிஸ்டம் ஒன்றை அறிமுகம் செய்யவும் அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலை கழகம் அதிகாரிகள் கூறியதாவது: பல்கலைக் கழக வளாகத்துக்குள் இருக்கும் புதர்கள் அகற்றப்பட்டு, இருளடைந்த பகுதிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் இயங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உதவுவதற்காக ஹெல்ப் டெஸ்க்குகள் அ மைக்கப்பட்டுள்ளன. மேலும், அண்ணா பல்கலைக்குள் இருக்கின்ற மூன்று நுழைவு வாயில்கள் வழியாக வருவோர் அடையாள அட்டையை காட்டிவிட்டு உள்ளே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் வழியாக வரும் வழி அடைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளியில் இருந்து பல்கலை வளாகத்துக்குள் வேறு பணிகளுக்காக வருவோரை சம்பந்தப்பட்டவர்கள் அழைத்து வந்து பின்னர் மாலையில் அவர்களே அழைத்து செல்லும் வகையில் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. கட்டுமானப்பணிகளில் ஈடுபடும் நபர்கள் இரவு நேரங்களில் பல்கலை வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளியாட்களும் அனுமதியின்றி உள்ளே வர முடியாது. அப்படி உள்ளே வருவோர் அனுமதி சீட்டு பெற்று, பணி முடிந்த பிறகு மீண்டும் அந்த அனுமதி சீட்டில் யாரை சந்திக்க வருகிறாரோ அவரிடம் கையொப்பம் பெற்று நுழைவு வாயிலில் கொடுக்க வேண்டும். இவை அல்லாமல், பல்கலை பாதுகாப்பு பணியில் மேலும் 15 முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வகுப்பறைகள், அலுவலகம், விடுதிகளில், 938 சிசிடிவி கேமராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. சம்பவம் நடந்த பகுதியில் கூடுதலாக 11 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் செல்லும் வழித்தடங்களில் 550 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவ மாணவியருக்கான ஹெல்த் சென்டர் செயல்பட்டு வருகின்றன. பல்கலை வளாகத்தில் வெளி நபர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பணியாளர்கள் அடையாள அட்டை அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்துக்குள் வருவோரை கண்காணிக்கவும், அவர்கள் யாரை சந்திக்கின்றனர் என்பதை உறுதி செய்யவும், தேவையற்றவர்கள் யாரும் வளாகத்துக்குள் வருவதை முற்றிலும் தடுக்கும் வகையில் ‘‘கியூஆர் கோடுடன் கூடிய விசிட்டர் சிஸ்டம்’’ காண்டு வரப்பட உள்ளது.

இதற்கான செயலி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் இடம் பெறும். அதை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட நபர் அனுமதி அளித்தால் மட்டுமே பார்க்க முடியும். இந்த விண்ணப்ப விவரங்கள் நுழைவு வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக செல்லும். அங்கு அந்த அனுமதியை காட்டிவிட்டு உள்ளே வரலாம். வேறு நபரை சந்திக்க விரும்பினாலும் அதற்கும் அனுமதி பெற வேண்டும். இதற்கான செயலியை உருவாக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழகம் ஈடுபட்டு வருகிறது.