Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாணவர்களின் திறமையை வேட்டையாடும் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள்: கடுமையாகச் சாடிய துணை ஜனாதிபதி

கோட்டா: நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் மாணவர்களின் திறமையை வேட்டையாடும் மையங்களாக உள்ளன என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடுமையாக சாடியுள்ளார். நாட்டில் புற்றீசல் போல பெருகிவரும் நுழைவு தேர்வ பயிற்சி மையங்கள், பெற்றோர்களிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களைப் பெற்று, செய்தித்தாள்களிலும், விளம்பரப் பலகைகளிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மாணவர்களை ஈர்த்து வருகின்றன. இந்த மையங்கள், மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து, அவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றி வருகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றலை அழித்து, அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் இந்த மனப்பாடக் கலாசாரம், நாட்டின் கல்வி முறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மேலும் பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்படும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறுகிறது. இந்தச் சூழலில், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள், மாணவர்களின் திறமைகளை வேட்டையாடும் கூடங்களாக மாறிவிட்டன. அவை நம்முடைய இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

இந்த மையங்கள் தங்களது உள்கட்டமைப்பைத் திறன் மேம்பாட்டு மையங்களாக மாற்ற வேண்டும். இந்த மனப்பாடக் கலாசாரம், பயனில்லா பட்டங்களையும், அர்த்தமில்லாத நினைவுகளையும் மட்டுமே உருவாக்கும். மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான செயலாகும். இனிமேல் ராணுவத்தை கொண்டு நாடுகளைக் காலனிப்படுத்த முடியாது; தொழில்நுட்பத்தில் தலைமை ஏற்பதே புதிய தேசப்பற்றாக இருக்க முடியும். இந்திய இளைஞர்கள், இந்திய மக்களுக்காக சாதனைகளை படைத்து அதனை உலகமயமாக்க வேண்டும்’ என்று கூறினார்.