சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாளில் தீர்வு காண முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக வருவாய் துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15ம் தேதி) கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைக்க உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அமுதா நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசின் தகவல் தொடர்பு அதிகாரிகளாக முதல்வர் நியமித்துள்ளார். அதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டங்கள், செயல்பாடுகள், தகவல்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும். அதுபற்றி பத்திரிகையாளர்களிடம் சரியான முறையில் எடுத்துரைக்க வேண்டும். தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும், விரைவாக இருக்க வேண்டும், துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் இதை செய்துள்ளார்.
வருவாய்த்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இதுபோன்று 7, 8 துறைகள் சம்பந்தமான புதிய திட்டங்கள், தகவல்கள் பற்றி அந்த துறையின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தகவல்களை வெளியிட என்னை நியமித்துள்ளார்.
முதல்வர், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில தொடங்கி வைக்க உள்ளார். அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக நான் உள்ளேன். முதல்வர் மக்களை சந்திக்கும்போது பொதுமக்கள் நிறைய மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை முதல்வர் வாங்கி, முதல்வரின் தனிப்பிரிவில் வழங்கப்பட்டது. அந்த துறை மூலம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல், கோட்டூர்புரத்தில் ஒரு கால்சென்டர் தொடங்கி உள்ளோம். 100 பேர் கொண்ட கால்சென்டரில் 1100 என்ற தொலைபேசி மூலம் வரும் அழைப்பை கேட்டு, பணிகளை செய்து கொடுத்து வருகிறோம். தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு நேரடியாக பொதுமக்கள் வந்து மனு கொடுத்து வருகிறார்கள். இதையெல்லாம் ஒருங்கிணைத்து, முதல்வரின் முகவரி துறை 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இதன் நோக்கம் என்னவென்றால், மக்களுடைய பிரச்னைகளை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதற்கும், அனைத்து துறை மூலம் நடவடிக்கையை துரிதப்படுத்தி, ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு விரைவான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான். கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த 30.6.2025 வரைக்கும் 1 கோடியே 1 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதெல்லாம் மக்கள் அரசாங்கத்திடம் அளிக்கும் மனுக்கள். இன்னொன்று, பொதுமக்கள் பல்வேறு திட்டங்களை பயன்படுத்துவதற்காக நிறைய அரசு அதிகாரிகளை பார்க்க வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் சிரமப்படுகிறார்கள். அதனால், மாவட்ட நிர்வாகம் மக்களை நோக்கி, அவர்களின் வீட்டின் அருகாமையிலேயே அரசு திட்டத்தின் பயன்களை ஏன் பெறக்கூடாது என்ற நோக்கத்திற்காக ‘மக்களுடன் முதல்வர்’ என்ற ஒரு திட்டத்தை முதலமைச்சர் 2023ல் அறிவித்தார். முதற்கட்டமாக நகர் பகுதிகளில் இந்த திட்டங்கள் நடைபெற்றது. அனைத்து நகர் பகுதிகளிலும் நவம்பர் 23ம் முதல் ஜனவரி 24ம் ஆண்டு வரையிலும் நடைபெற்றது. 2,058 முகாம்கள் நடைபெற்றதில் 9 லட்சத்து 5 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு, அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் பட்டா மாற்றம், மின்இணைப்பு பெயர் மாற்றம், ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா இதுபோன்ற பல கோரிக்கைகள் வந்தது. எங்களுக்கு இந்த முகாம் பயனுள்ளதாக இருந்தது, போனவுடன் வேலை எளிதாக முடிந்து விட்டது என்று பொதுமக்கள் கூறினர். அடுத்தக்கட்டமாக ஊரக பகுதிகளில் இதுபோன்ற முகாம்கள் 2ம் கட்டமாக நடத்தப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றது. 2,344 முகாம்களில் 12.87 லட்சம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் இலவச பட்டா உள்ளிட்டவை தீர்வு காணப்படாமல் உள்ளது. விரைவில் தீர்வு காணப்படும். கிராமங்களில் மக்கள் எதிர்பார்ப்பது, முதலமைச்சரின் காப்பீட்டு அட்டை, புதிய ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாதனங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், பட்டா மாற்றம் உள்பட பல்வேறு துறைகளில் மனுக்கள் பெறப்பட்டது.
இதில் இருந்து முக்கியமான நோக்கம் என்னவென்றால், மக்கள் அதிகமாக நாடும் தேவைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் வீடுகள் அருகிலேயே முகாம்கள் நடத்தி தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். இதுபோன்ற முகாம்களை மக்கள் விரும்புகிறார்கள், இதை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
‘முதல்வரின் முகவரி - 3’ திட்டம் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தோம். கடந்த ஜூன் வரை நடைபெற்றது. முக்கியமாக எஸ்சி-எஸ்டி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 433 முகாம்களில் 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1.47 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இப்போது அடுத்தக்கட்டமாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் குறிப்பிட்டு சொன்னது என்னவென்றால், மக்களுக்கு அரசாங்கம் முகாம் நடத்துவது தெரிய வேண்டும், தெரியப்படுத்த வேண்டும், என்றார். முகாம் நடத்துவதற்கு முன்பே, தன்னார்வலர்களை வீடு வீடாக அனுப்பி சொல்ல வேண்டும். இந்த முகாம்களில் இன்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்க வேண்டும் என்றார். அந்த பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதன்படி நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கப்படும். ஊரக பகுதிகளில் 13 துறைகள் மூலம் 46 சேவைகள் வழங்கப்படும். இதற்கு முன் நடத்தப்பட்ட முகாம்களில், மக்களின் தேவைகள் அறிந்து, இந்த முகாம் நடத்தப்படுகிறது.
மனுக்களை பொதுமக்களிடம் பெற்று, துறைகளுக்கு அனுப்பி, அதற்கான பதிலை பொதுமக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். மனுக்கள் மீது தற்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எங்கு நிலுவையில் உள்ளது என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும். பதில் திருப்தியாக இல்லையென்றால் பொதுமக்கள் எங்களிடம் முறையிடலாம். அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாளில் தீர்வு காண முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சில மனுக்கள் மீது ஒரு நாளில் கூட தீர்வு ஏற்படுத்தப்படும். சில மனுக்கள் ஒரு வாரத்தில் முடியும். இதுபற்றி அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுரை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இணையதள பக்கம் தொடக்கம்
தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் இந்த முகாமை தொடங்கி வைப்பார்கள். ஒரு மாவட்டத்தில் சுமார் 6 முகாம் நடைபெறும். வாரத்தில் 4 நாள், அதாவது செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி முகாம் நடைபெறும். தொடர்ச்சியாக நவம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த முகாம்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் வெற்றிகரமாக நடைபெறும். இதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற இணையதள பக்கம் இன்று தொடங்கப்படும். ஒரு மாதத்திற்கு தேவையான முகாம்கள் குறித்த முழு விவரங்களையும் பொதுமக்கள் இதில் தெரிந்து கொள்ளலாம்.
மொத்தம் 10 ஆயிரம் முகாம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே வீடு வீடாக சென்று, என்ன ஆவணம் கொண்டு வர வேண்டும், என்னென்ன திட்டங்கள் முகாம்களில் தீர்வு பெற முடியும் என்பது குறித்து விரிவாக தன்னார்வல்கள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையான ஆவணங்களை எடுத்துவந்துவிட்டால், முகாம்களுக்கு வந்து ஏமாற்றம் அடைய தேவையில்லை. இந்த பணிக்காக 1 லட்சம் தன்னார்லர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புற பகுதிகளில் 3,758 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் நடத்தப்பட உள்ளது. இன்று (15ம் தேதி) முதல் ஜூலை 15ம் தேதி வரை ஒரு மாதம் வரை முதற்கட்டமாக முகாம் நடைபெறும். மொத்தம் 3,562 முகாம் நடைபெறும். நகர்ப்புற பகுதிகளில் 1,428 முகாம்களும், ஊரக பகுதிகளில் 2,135 முகாம்கள் நடைபெறும். இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் தன்னார்வலர்கள் 28,370 ஈடுபடுவார்கள்.