Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் ஓபிசி, தலித், பெண் தலைவர்களை தேடும் பாஜக: மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் நியமிக்க முடிவு

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் உடனான மோதலுக்கு மத்தியில் பாஜக தேசிய தலைவர் பதவிக்கு ஓபிசி, தலித், பெண் தலைவர்களை அக்கட்சி தேடி வருகிறது. மகாராஷ்டிரா, அரியானா தேர்தலுக்கு முன் தேசிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. பாஜக தேசிய தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஆர்எஸ்எஸ் ஆதரவு இல்லாமல் செயல்படும் அளவுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக மாறிவிட்டது’ என்று கூறினார். ஜேபி நட்டாவின் கருத்தால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், பாஜகவுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.

அதீத நம்பிக்கையில் இருந்த பாஜகவுக்கு தேர்தல் முடிவானது உண்மை நிலையை உணர்த்தி உள்ளதாக, ஆர்எஸ்எஸ் இதழில் கட்டுரை வெளியானது. இவ்வாறாக பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல் இருந்து வரும் நிலையில், பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்? என்ற விவாதம் தொடங்கிவிட்டது. காரணம், பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். தற்போதைய மோதல் சூழலில், யாரை தேசிய தலைவராக பாஜக தேர்வு செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ஜே.பி.நட்டாவின் பதவிகாலம் இம்மாதத்துடன் முடிகிறது. அவர் ஒன்றிய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அவருக்கு இனிமேல் பதவி நீடிப்பு வழங்க முடியாது.

அதனால் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்டன. ஓபிசி அல்லது தலித் அல்லது பெண் தலைவர்களில் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ஆர்எஸ்எஸ் உடன் தீவிர தொடர்பு உள்ளவர்கள் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதுகுறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தனது தொடர்ச்சியான மூன்று வெற்றிகளுக்கு பெண் வாக்காளர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதாக கருதுகிறார். பாஜகவை இதுவரை எந்த பெண் தலைவரும் வழிநடத்தவில்லை. அதனால் பெண் தலைவரை தேர்வு செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது. கட்சியில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிரா, அரியானா சட்டப் பேரவை தேர்தல்கள் வரவுள்ளதால், அதற்கு முன் தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார்’ என்றனர்.