வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 10 பேர் ஆதரவு: ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் பேட்டி
மதுரை: வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற 10 நீதிபதிகள் திரண்டனர். மதுரையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தனது கோரிக்கை தொடர்பான பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார்.
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரது அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் வாஞ்சிநாதன் ஆஜரானார். அப்போது "எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?" என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்துள்ள அவமதிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய; ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்; வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 10 பேர் ஆதரவாக உள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வாஞ்சிநாதன் அனுப்பிய கடிதத்தை கசிய விட்டது யார்? நீதிபதி சுவாமிநாதன் ஜாதிய சார்புடன் நடப்பதாக தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாரை கசிய விட்டது யார்? புகார் அளிக்க கூட வழக்கறிருக்கு உரிமை இல்லையா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்தது தவறு; இது தனிப்பட்ட வாஞ்சிநாதன் பிரச்சனை அல்ல.
தன் மீதான புகாரை நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பது அநீதியானது. நீதிபதி சுவாமிநாதன் விசாரிப்பதை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலையிட்டு தடை செய்ய வேண்டும். நீதிபதி சுவாமிநாதன் நடவடிக்கையை 99% வழக்கறிஞர்கள் எதிர்க்கிறார்கள். நீதிபதி சுவாமிநாதன் ஜாதி, மத ரீதியாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர் என்று கூறினார்.