Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2025, 2026ம் ஆண்டுகளில் 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரசை பலப்படுத்த ‘பந்தய குதிரை’களை தேடும் ராகுல்: இந்திரா காந்தியின் பார்முலாவை பின்பற்ற முடிவு

புதுடெல்லி: 2025, 2026ம் ஆண்டுகளில் 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ‘பந்தய குதிரை’களை ராகுல்காந்தி தேடி வருகிறார். மேலும் இந்திரா காந்தியின் பார்முலாவை பின்பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாடு முழுவதும் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தவும், பாஜகவின் வலுவான தேர்தல் இயந்திரத்தை எதிர்கொள்ள தீவிரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

ஒன்றிய அரசு மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதோடு, கட்சிக்குள் செயல்படாத மற்றும் சமரசம் செய்யும் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, பீகார் மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் போன்ற தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனது குஜராத் பயணத்தின்போது, காங்கிரஸ் மாநில அமைப்பானது ‘திருமண குதிரைகள்’ (வெறும் காட்சிப்பொருளாக இருக்கும் திறனற்ற தலைவர்கள்) போன்று இருப்பதால், மாநிலத்தில் கட்சியின் பலம் பின்தங்கியுள்ளதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

குஜராத்தில் இழந்த புகழை மீட்டெடுக்க, ‘பந்தய குதிரைகள்’ (திறமையான உழைப்பாளி, வெற்றி தேடித்தரும் தலைவர்கள்) மீது பந்தயம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 1970ம் ஆண்டு வாக்கில் பின்பற்றப்பட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளை வலுப்படுத்தி, மத்தியில் உள்ள அதிகாரத்தை பரவலாக்கும் முயற்சியாக, ‘சங்கதான் ஸ்ருஜன் அபியான்’ என்ற பெயரில் குஜராத்தில் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி முன்னெடுக்கும் முயற்சிகள் மத்தியப் பிரதேசம், அரியானா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தலைவர்களின் நியமனங்களை ராகுல் காந்தியே நேரடியாக கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த செயல்முறையால் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளின் உண்மை விபரங்கள் வெளிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, கட்சிக்காக செயல்படாத தலைவர்களை ‘லங்கடே கோடே’ (பலவீனமான குதிரைகள்) என்று குறிப்பிட்டு, அவர்களை கட்சிப் பதவிகளில் வெளியேற்ற வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். இது அவரது சமரசமற்ற அணுகுமுறையைக் காட்டுகிறது.

ராகுல்காந்தியின் இந்த முயற்சி காங்கிரசின் அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்தி, 2025, 2026ம் ஆண்டுகளில் பீகார், அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களில் பயனளிக்கும் என்று கட்சி நம்புகிறது. ஆனால், குஜராத்தின் இளம் காங்கிரஸ் தலைவர் ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட பதிவில், ‘கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு முடிந்த பிறகும், தகுதியற்ற தலைவர்களுக்கு மீண்டும் பதவிகள் வழங்கப்படுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ராகுல்காந்தியின் நோக்கம் கட்சிக்குள் அமல்படுத்துவது என்பது சவால் நிறைந்ததாகவே உள்ளது.