Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள்: 10,661 நியாயவிலைக் கடைகளில் UPI மூலம் பணப்பரிவர்த்தனை

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் 7.5.2021 அன்று பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவி உலகம் முழுவதும் உயிர்ப் பலிகள் வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் எல்லோருக்கும் தடையின்றி உணவுப் பொருள்கள் வழங்கிட உத்தரவிட்டார். அதன்படி, 2022ம் ஆண்டில், 2,07,70,726 அரிசி அட்டைதாரர்களுக்கு, 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய கொரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2,08,42,716 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வீதம் கொரோனா நிவாரண உதவித்தொகை இரண்டு தவணைகளாக 2021 மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டு மக்கள் துயர் தணிந்து முதல்வர் வாழ்த்தினார்.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம், சத்து மிகுந்த கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய சிறுதானியங்களை விற்பனை செய்திட ஆணையிட்டார். இதுவரை, தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ:9001 சான்றிதழும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பிற்கான, 2,059 நியாய விலைக் கடைகளுக்கு ஐஎஸ்ஓ:28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 நியாயவிலைக்கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 நியாயவிலைக்கடைகளும், என மொத்தம் 37,328 நியாயவிலைக்கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன. இவற்றுள் 26,618 நியாயவிலைக்கடைகள், முழுநேரமும் செயல்படுகின்றன. 10,710 நியாயவிலைக்கடைகள், பகுதி நேரக் கடைகளாகச் செயல்படுகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 2 கோடியே 25 லட்சத்து 93 ஆயிரத்து 654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இதுவரை, 10,661 நியாய விலைக் கடைகளில் யூபிஐ முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.100 கோடி ஆகவும், செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 71.73 கோடி ஆகவும் இருந்தது. கடந்த 2024-2025ல் திராவிட மாடல் அரசு பங்கு மூலதனம் ஆக 2000 கோடி ரூபாய் வழங்கியதால் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2100 கோடியாகவும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 2,071.73 கோடியாகவும் உயர்ந்துள்ளது. பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றிமையாப் பொருள்களை விநியோகிப்பதற்காகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.14,000 கோடியாக மானியத்தை உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை தமிழ்நாடு முழுவதும் மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்புப் பொருள்களை வழங்கி வருகிறார். அதன்படி, 2022ம் ஆண்டில் 2,15,67,122 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள், ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.2023ம் ஆண்டில் 2,19,33,342 அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ரூ.1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

அதேபோல, 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 2,19,51,748 அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன. 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1,94,35,771 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படி திராவிட மாடல் ஆட்சியில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் உணவுப் பொருள் வழங்கும் கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் உரிய நேரத்தில் வழங்கி, ஏழை எளிய மக்களின் வறுமையை நீக்கி வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையை நிலைநாட்டி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.