Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளமான இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளது பாஜக: வேலூர் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

வேலூர்: வளமான இந்தியாவிற்கு அடித்தளமிட்டுள்ளது பாஜக என வேலூர் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேடைக்கு வந்த பிரதமர் மோடி; தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார். அதனை தொடர்ந்து பொன்னாடை அணிவித்து பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பிரதமரை கெளரவித்தனர்.

எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார் மோடி; தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். தமிழ் புத்தாண்டில் தமிழகம் மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப்போவதை, டெல்லியில் உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்; இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும்.

தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன். 2014க்கு முன் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. உதான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலைய பணிகள் விரைவில் முடிக்கப்படும்; வேலூர் மக்களின் கோரிக்கைகளை மனதில் வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுகிறது. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா இருக்கிறது; அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.

இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்; அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது. அயோத்தி ராமர் வேடத்தில் ஒரு சிறுவன் எனக்கு கைகாட்டுவதை நான் பார்க்கிறேன். நான் குஜராத்தின் முதல்வராக இருந்த போது வேலூர் அருகே உள்ள தங்க கோவிலுக்கு வந்திருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான உத்தரவாதம். ஏப்.19ஆம் தேதி தமிழகத்தின் பெருமையை காக்க, வளர்ச்சிக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டும். என்னுடைய பேச்சை நீங்கள் நமோ இன் தமிழ் என்ற செயலி மூலம் தமிழில் கேட்கலாம் இவ்வாறு கூறினார்.