டெல்லி : 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயண செலவு மட்டும் ரூ. 362 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது. அதில், பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 20 நாடுகளுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2021-2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.295 கோடி செலவாகி உள்ளதாக பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவு புள்ளி விவர தரவுகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் 2025ம் ஆண்டு மட்டும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பயணங்களுக்கு ரூ.67 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் பயணம் மட்டும் ரூ.25 கோடியை தாண்டியுள்ளது. நாடு வாரியாகவும் ஆண்டு வாரியாகவும் உள்ள தரவுகளின்படி, நடப்பு ஆண்டு மொரிஷியஸ், சைப்ரஸ், கனடா. குரோஷியா, கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணங்களுக்கான புள்ளிவிவரங்கள் தரப்படவில்லை. பிரதமர் மோடியின் 2023ம் ஆண்டு எகிப்து பயணத்திற்காக, விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கான செலவு மட்டும் ரூ.11.90 லட்சம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.