சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் சந்தித்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக ஜூலை 21ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் செய்யப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது.
முதலமைச்சர் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ‘முதலமைச்சர் முழுமையாக குணமடைந்துவிட்டார். 3 நாட்களுக்கு பிறகு முதலமைச்சர் வழக்கமான பணிகளை தொடரலாம்’ என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் சந்தித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரித்தார்.