உலகின் நம்பர் ஒன் பிரசாதம்; 310 ஆண்டுகளை நிறைவு செய்தது திருப்பதி லட்டு: 50 காசில் தொடங்கி தற்போது ரூ.50க்கு விற்பனை
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாகவும், கட்டணத்தின் பேரிலும் வழங்கப்படுகிறது. இதனால் திருப்பதி என்றாலே அனைவரின் நினைவில் வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி லட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் மிகவும் பிரபலமானது. அத்தகைய லட்டு நேற்றுடன் 310 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 310 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தனித்துவமானது. பல ஆண்டுகளாக பல மாற்றங்களைச் செய்து, பக்தர்களுக்காக அதிக தரம், சுவை, தூய்மை மற்றும் பக்தியுடன் தயாரிக்கப்பட்டு, உலகின் நம்பர் 1 பிரசாதமாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
பிரசாதமாக லட்டு வழங்கும் முறை 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அன்று தொடங்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகிறது. 2010ம் ஆண்டு வரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தினமும் 1 லட்சம் லட்டுகளை தயாரித்து வந்தது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் தற்போது தேவஸ்தானம் தினமும் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகளை தயாரிக்கிறது. இதற்காக ஏராளமான கவுன்டர்கள் அமைக்கப்பட்டு லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுகிறது. அந்த
இடத்திற்கு செல்லும்போது லட்டுவின் மணம் பக்தர்களின் மனங்களை மயக்கும் வகையில் இருக்கும்.
இந்த நிலையில், ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் அன்று தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், சிலர் கி.பி 1803ல் பூந்தி என்று அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 1940ல் லட்டு பிரசாதமாக மாறியதாக கூறுகின்றனர். அவ்வாறு கடந்த 1940ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டதாக எடுத்துக் கொண்டால் லட்டுவின் வயது 83 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில், ஒரு லட்டு பிரசாதம் எட்டணாவிற்கு (50 காசு) வழங்கப்பட்டது, பின்னர் அது ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.15, ரூ.25க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மிகவும் சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டுக்கு காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரையும் பெறப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், திருப்பதி லட்டு புவியியல் குறியீடாகவும் அங்கீகரிக்கப்பட்டது. லட்டுவின் தனித்துவத்தை பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிக்க முயன்றனர். பல நிறுவனங்கள் திருப்பதி லட்டு என உருவாக்கி ஆன்லைனில் விற்க முயன்றனர். ஆனால் அவர்களால் திருப்பதி லட்டுக்கு இணையான சுவையை வழங்க முடியவில்லை. ஆன்லைனில் லட்டு விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது லட்டு பிரசாதம் தயார் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ இயக்குனர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நெய் சப்ளை செய்த நிறுவனத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆட்சியில் லட்டு தயாரிப்பதற்கு சப்ளை செய்தது நெய்யே இல்லை என்பதும், பாமாயிலில் ரசாயனங்கள் கலந்து நெய் என தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கர்நாடக மாநில அரசின் நந்திமி நெய் கொள்முதல் செய்யப்பட்டு தற்போது லட்டு தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.