Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 ரொக்கம் பெற இன்று முதல் வீடு, வீடாக டோக்கன்கள் விநியோகம்

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பெறுவதற்கான டோக்கன் இன்றுமுதல் வீடு, வீடாக வழங்கப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி, தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக இன்று காலை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகத்தை தொடங்கினர். அந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கன் நாளை மற்றும் நாளை மறுநாள் வரை வினியோகிக்கப்படுகிறது. வருகிற 10ம்தேதி (புதன்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னையில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்குதல் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகம் தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் தொடங்கி வைக்கின்றனர். வரும் 10ம் தேதி முதல் 13 வரை ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். விடுபட்டவர்களுக்கு 14ம்தேதி வரை பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணத்தை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பொங்கல் தொகுப்பு, ரொக்கப்பணத்தை பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் எந்த சிரமமும் இன்றி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமியானா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்பட்டுவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை, இந்த மாதம் பொங்கலுக்கு முன்னதாக அதாவது, வரும் 10ம் தேதியே 1 கோடியே 15 லட்சம் மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.