Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஷச் சாராயம் சம்பவம்.. கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை?.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி..!!

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 47பேர் உயிரிழந்து இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணம் தொடர்பாக சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து  அதிமுக எம்.எல்.ஏ. பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு முன்னிலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம்; விஷச் சாராய மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையில் எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் விஷச் சாராய மரணங்கள் நடைபெறுவது இது முதல்முறையல்ல. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் கண் பார்வை இழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும், 2023ம் ஆண்டு இதேபோல மரக்காணத்தில் விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் 300க்கு மேற்பட்டோர் விஷச் சாராயம் அருந்தி இருக்கிறார்கள். அதனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டதால் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கூடாது அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; விஷச் சாராயம் விற்றது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் 8 பேர் குண்டர் சட்டம் பாய்ந்தது என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 6 பேர் கைது, 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; விஷச் சாராயம் விற்பனையை தடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்; இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 4 மருத்துவமனைகளில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் அவர் பட்டியலிட்டார். அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள்; கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, மரக்காணம் சம்பவம் தொடர்பாகவும் விரிவான அறிக்கையை வரும் புதன் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், வழக்கின் விசாரணையை அன்றைய தினமே ஒத்திவைத்தது.