Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா?.. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. கேள்வி

டெல்லி: இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்று பேசிய கனிமொழி எம்.பி.; ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிநாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக முதன்முதலில் பேரணி நடத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்ற தொனியில் அமித் ஷா பேசினார். தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக்கொடுத்தது இல்லை. தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல. நாங்கள் இந்த தேசத்தோடுதான் நிற்கிறோம். பாஜகவினர் பேசுவதால்தான் இப்போது அம்பேத்கரையும் பெரியாரையும் இளையர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர், தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்?. மும்பை தாக்குதல் நடந்தபோது பிரதமரே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் தற்போது நடக்கும் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா?. தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன உதவி செய்கிறது. உதவி செய்யும் பொறுப்புகள் அனைத்தையும் ஒன்றிய அரசு மாநிலங்கள் தலையில் போட்டுவிடுகிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டில் இருந்துதான் இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும் என்று ஸ்டாலின் பேசுவதை ஏற்க மறுக்கிறீர்கள்.

கங்கையை வென்றவர் சோழன் என்பதால் அதற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் வந்தது, தமிழன் கங்கையை வெல்வான். ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆன பிறகும் எப்போதே நடந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். 50,100 ஆண்டுக்கு முன்பு நடந்ததை குறை சொல்வதை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாத தாக்குதலை தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்?. அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாள பார்க்கிறீர்கள்? மதரீதியாக நாட்டில் பிரிவினை உருவாக்குவதுடன் வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்? இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவர்களை மோசமாக விமர்சித்த பாஜக எம்.பி. மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேட்டி அளித்த விக்ரம் மிஸ்திரியின் குடும்பத்தையே மோசமாக விமர்சித்தனர். இந்தியாவின் இறையாண்மையை நம்புகிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு அனைத்து கட்சிகளும் ஒன்றிய அரசுக்கு துணை நிற்போம் என்று உறுதி அளித்தோம். பாஜகவை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை. பாஜகவின் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்கள் வெளியுறவு கொள்கையா? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்குகூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன; ஆனால் இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை; இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா? இலங்கை அரசுடன் நெருக்கமாக உள்ளீர்கள், வேண்டிய தொழிலதிபருக்கு ஒப்பந்தங்களை பெற்றுத் தருகிறீர்கள்; ஆனால் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் மட்டும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் மீனவர்களை தாக்கி சிறைபிடிக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் அதிகாரிகளே ராணுவத்தை மேம்படுத்த வேண்டியிருப்பதாக கூறுகிறார்கள். அப்படியானால் எதையும் எதிர்கொள்ள பாஜக ஆட்சியில் ராணுவம் தயாராக இல்லையா? டிரோன் தாக்குதலை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருந்ததா? ஒன்றிய பாஜக அரசு பதவி நீட்டிப்பு அரசாக உள்ளது. உளவுத்துறை, அமலாக்கத்துறை என அனைத்து தலைவர்களும் பதவி நீட்டிப்பு பெற்றவர்களாகவே உள்ளனர் என்று கூறினார்.