நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் ‘இந்தியா’ கூட்டணி முக்கிய ஆலோசனை: திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
* போரை நிறுத்தியதாக கூறும் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் ஓரணியாக செயல்படுவது குறித்து விவாதம்
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது, பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஓரணியாக செயல்படுவது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. வருமான வரி மசோதா மீதான தேர்வுக்குழுவின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த மசோதாவையும் நிறைவேற்ற அரசு விரும்புகிறது. இதுதவிர மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவும் தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளை பொறுத்த வரையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளை கூட்டத்தொடரில் எழுப்ப திட்டமிட்டுள்ளன. தற்போது பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீவிர திருத்தம் மூலம் தகுதியான வாக்காளர்களை நீக்கவும், அதன் மூலம் பாஜ ஆதாயம் அடையவும் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் இம்முறை முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பீகார் முன்னாள் துணை முதல்வரான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரசின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இதற்கு கடுமையான எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பது குறித்தும், வர்த்தகத்தை வைத்து அதிபர் டிரம்ப் மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் ஒன்றிய அரசு பதிலளிக்க நிர்பந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கருகிய நிலையில் கைப்பற்றப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்யக்கோரும் விவகாரம், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது போன்ற விவகாரங்களையும் அவையில் எழுப்ப இந்தியா கூட்டணி தீர்மானித்துள்ளது.
இதை தவிர, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரும் விவசாயிகளின் கோரிக்கைகள், பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள், அகமதாபாத் விமான விபத்து போன்ற விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலை எதிரொலிக்க வேண்டுமெனவும் இவ்விவகாரங்களில் ஓரணியாக செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றம் கூட இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
* அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோரும் வகையில் ஒன்றிய அரசு தரப்பில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடக்கும் இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அலுவல்கள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அரசு தெரியப்படுத்தும். மேலும், எந்தெந்த விவகாரங்களில் விவாதம் நடத்துவதென எதிர்க்கட்சிகளின் கருத்தை அறிய உள்ளது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் அத்தனை முக்கிய பிரச்னைகள் குறித்தும் அவையில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர்.