பஹல்காம் தாக்குதல்.. அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன்: ராகுல் காந்தி உருக்கம்
டெல்லி: மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது பேசிய அவர்; அப்பாவி மக்களுக்கு நேர்ந்த கொடூரத்தை எனக்கு நேர்ந்ததாக உணர்ந்தேன். பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களை எனது உறவினர்களை இழந்ததாக கருதுகிறேன். பஹல்காமில் அப்பாவி மக்கள் சிறிதும் இரக்கமின்றி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காமில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தேன். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எதிர்க்கட்சிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டன; ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டன. அனைத்து எதிர்க்கட்சிகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தோம்.
பஹல்காமில் பச்சைப் படுகொலையை அரங்கேற்றியது பாகிஸ்தான் அரசுதான். ஆபரேஷன் சிந்தூர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசுக்கு முழு ஆதரவு அளித்தன. ஒன்றிய அரசின் பின்னால் எதிர்க்கட்சிகள் மலைபோல் துணை நின்றன. ஒன்றிய அரசுக்கு துணைநிற்பது என இந்தியா கூட்டணி கட்சிகள் கூடி முடிவு செய்தோம். நமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை காப்பதில் புலி போல் செயல்பட்டார்கள். பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். வங்கதேசப் போரின் அமெரிக்காவின் 7வது கப்பற்படை வந்தது; ஆனால் அதை உறுதியுடன் எதிர்கொண்டார் இந்திரா காந்தி. 1971 போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்பிட்டு பேசினார்.
ஆனால் 1971 போரின்போது வலுவான அரசியல் தலைமை இருந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, எந்த வல்லரசு நாட்டின் ஆதிக்கத்துக்கும் அடிபணியவில்லை. 1971 பேரின்போது பாதுகாப்புப் படையினருக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் அளித்திருந்தார். இந்தியாவின் வலுவான நடவடிக்கையால்தான் ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் 1971 சரணடைந்தனர். ஒரு சண்டை நடக்கும்போது தொடர்ந்து நான் தாக்க மாட்டேன் என்று சொல்வது எப்படி சரியாக இருக்கும்?. ஆப்ரேஷன் சிந்தூருக்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்துவிட்டது மோடி அரசு. ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய 30 நிமிடங்களிலேயே இந்தியா சரணடைந்துவிட்டது. பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் தாக்க மாட்டோம் என இந்திய அரசு உறுதி அளித்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மோடி தவறிவிட்டார். பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என பிரதமர் மோடியே உத்தரவிட்டது எப்படி சரியாகும்?. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என இந்திய படைகளுக்கு உத்தரவிட்டதை ராஜ்நாத் சிங்கே ஒப்புக் கொள்கிறார். நமது விமானப் படையின் கைகளை கட்டிவிட்டீர்கள். அரசியல் தலைமையின் உத்தரவு காரணமாகவே பாக். ராணுவ தளங்களை தாக்கவில்லை என ராணுவ அதிகாரியே கூறுகிறார். இந்திய ராணுவம் எந்தத் தவறும் செய்யவில்லை; தவறு செய்தது பிரதமர் மோடிதான். பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கக் கூடாது என்று கூறியதால்தான் இந்தியா விமானங்களை இழக்க நேரிட்டது. ஒன்றிய அரசின் தவறால் விமானங்களை இழந்தோம் என ராகுல் கூறினார்.