ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மக்களவையில் காரசார விவாதம்: யாருடைய நிர்பந்தத்தால் போர் நிறுத்தப்பட்டது; டிரம்ப்பை பார்த்து மோடி பயப்படுவது ஏன்?; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
* போர் நிறுத்தத்துக்கு யார் தலையீடும் காரணம் அல்ல என ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் காரசார விவாதம் நேற்று நடந்தது. இதில், ‘யாருடைய நிர்பந்ததால் போர் நிறுத்தப்பட்டது, டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவது ஏன்’ என எதிர்க்கட்சி எம்பிக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். போர் நிறுத்தத்திற்கு யார் தலையீடும் காரணமல்ல என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாளிலேயே ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து அவையில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
மேலும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் குறித்தும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு, ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரமும், மாநிலங்களவையில் 16 மணி நேரமும் விவாதம் நடத்த ஒப்புக் கொண்டது. அதன்படி, மக்களவையில் நேற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. காலையில் அவை கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்தும் விவாதம் நடத்த அரசு உறுதி அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் தொடங்கியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது: ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நீதி வழங்குவதற்காக மே 7ம் தேதி இரவு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூரின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ராணுவ நோக்கம் தீவிரவாதத்தின் மூலம் மறைமுகப் போரை நடத்தியதற்காக பாகிஸ்தானைத் தண்டிப்பதாகும். இதன் காரணமாகவே இலக்குகளைத் தேர்ந்தெடுத்து தகுந்த பதிலடி கொடுக்க ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
நமது நோக்கம் எட்டப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் கேட்டுக் கொண்டதன் பேரில் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்த எந்த அழுத்ததமும் இருந்ததில்லை. யாருடைய தலையீட்டாலும் ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தான் இனியும் புதிய தவறான சகாசத்தில் ஈடுபட்டால் அது மீண்டும் தொடங்கும். அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை.
ஆபரேஷன் சிந்தூரில் நமது விமானங்கள் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் நமது படைகள் எத்தனை பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தின என்று அவர்கள் ஒருபோதும் கேட்கவில்லை. எந்தவொரு தேர்விலும், பென்சில் உடைந்ததா அல்லது பேனா தொலைந்துவிட்டதா என்பது முக்கியமல்ல, தேர்வு முடிவு தான் முக்கியம். அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் நமது வலிமையின் சின்னம். இந்தியா தனது மக்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால் அமைதியாக இருக்காது என்பதை நிரூபித்தது. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க புதிய இந்தியா எந்த எல்லைக்கும் செல்ல முடியும். இவ்வாறு கூறினார்.
காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகாய் பேசியதாவது: உரி, புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு பிரதமர் மோடி, பாகிஸ்தானில் தீவிரவாத கட்டமைப்புகளை அழித்து விட்டோம் என்றார். ஆபரேஷன் சிந்தூரின் போதும் அதையே கூறுகிறார். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முழுமையடைவில்லை என்கின்றனர். பிறகு எப்படி முழு வெற்றி கிடைத்ததாகும். பாகிஸ்தான் இந்தியாவின் முன் மண்டியிட தயாராக இருந்ததாக கூறுகிறீர்கள். அப்படி என்றால் போரை நிறுத்த என்ன காரணம்? யாருக்கு முன் சரணடைந்தீர்கள்?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தகத்தை வைத்து மிரட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 26 முறை கூறி இருக்கிறார். 5 முதல் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த விஷயத்தில் உண்மையை தான் நாங்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கிறோம். உண்மையை கேட்க நாட்டிற்கு தைரியம் உண்டு. எத்தனை போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். இந்த உண்மை, இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, வீரர்களுக்கும் முக்கியமானது, அவர்களிடம் பொய் சொல்லப்படுகிறது.
இந்திய ராணுவத்திடம் 35 ரபேல் போர் விமானங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் சில சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தால் அது பெரிய இழப்பு. மேலும், சிந்தூர் நடவடிக்கையின் போது இழப்புகளை சந்தித்த பிறகு திட்டங்களை சரி செய்து பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமான தாக்குதல் நடத்தப்பட்டதாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறியிருக்கிறார். அரசு தலைமையிடத்தில் இருந்து ராணுவ நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் இருந்ததாக குரூப் கேப்டன் கூறியிருக்கிறார். சீனா சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஆனால் சீனாவைப் பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஒருவார்த்தை கூட கூறவில்லை. ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா எவ்வளவு ஆதரவை அளித்தது என்பதை அவர் வெளியிட வேண்டும். பஹல்காம் தாக்குதல் நடந்து 100 நாட்கள் கடந்து விட்டன. ஆனாலும் அதில் நேரடியாக ஈடுபட்ட தீவிரவாதிகளை நீதியின் முன் அரசு நிறுத்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்கிறார். நியாயமாக உள்துறை அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். துணை நிலை ஆளுநர் பின்னால் நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது. இந்த அரசு மிகவும் கோழைத்தனமானது, மிகவும் பலவீனமானது, பஹல்காம் தாக்குதலுக்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்களைக் கூட குற்றம் சாட்டியது.
பாதுகாப்பு முடிவுகளை எடுப்பவர்கள் திமிர்பிடித்தவர்களாகி விட்டதால், யாரும் அவர்களை கேள்வி கேட்க முடியாது என்பது போல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களிடம் கேள்வி கேட்போம். பஹல்காம் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், தனது கணவரின் சடலத்துடன் இந்து-முஸ்லிம் அரசியலை விளையாடக்கூடாது என்று கூறியதை நாங்கள் கண்டோம். இந்த அரசு, எங்களை எதிரியாகக் கருத வேண்டாம். நாங்கள் நாட்டிற்கும் நமது ஆயுதப் படைகளுக்கும் ஆதரவாகப் பேசுகிறோம். ஆனால் நீங்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி பேசுகையில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் 26 முறை கூறி விட்டார். ஆனால் அவர் சொல்வது தவறு என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியால் ஒருமுறை கூட பதிவிட முடியாதது ஏன்? அமெரிக்க அதிபரின் முன்பாக மட்டும் உயரம் 5 அடியாகக் குறைகிறது, 56 அங்குல மார்பு 36 அங்குலமாகக் குறைகிறது. அமெரிக்க அதிபரை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து நள்ளிரவு வரை விவாதம் காரசாரமாக நடந்தது. மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் இன்று நடக்க உள்ளது.
* பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேசவில்லை
விவாதத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘‘நான் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும், அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டாவதாக, ஏப்ரல் 22ம் தேதி அதிபர் டிரம்ப் பஹல்காம் தாக்குதலுக்காக தனது இரங்கலை தெரிவித்த பிறகு, ஜூன் 17ம் தேதி வரை பிரதமர் மோடியுடன் பேசியதில்லை. இரு தலைவர்கள் இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை’’ என்றார்.
* கிரிக்கெட் விளையாட கூடாது
சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் பேசுகையில், ‘‘போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் மன்றாடும் போது, எந்த நிபந்தனையும் விதிக்காமல் போரை இந்தியா ஏன் நிறுத்தியது? இந்த சாதகமான சூழலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பதில் எது உங்களை தடுத்தது? சீனாவும் துருக்கியும் பாகிஸ்தானை ஆதரித்தபோது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஒரு உலக நாடு கூட இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. பலமுறை நம்மை காயப்படுத்திய பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமாக இருக்காது’’ என்றார். ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் செப்டம்பர் 14ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
* பிரதமர் மோடி இன்று பதிலளிப்பார்
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் மக்களவையில் இன்றும் தொடரும். இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச உள்ளார். மேலும், இரவு 7 மணி அளவில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
* அடுத்த 20 ஆண்டுகள் நீங்கள் எதிர்க்கட்சி தான்
விவாதத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் டிரம்ப் குறித்து பேசிய போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த அமித் ஷா உடனடியாக குறுக்கிட்டு, ‘‘வெளிநாட்டை நம்புகிறீர்கள். தாய்நாட்டை சந்தேகப்படுகிறீர்கள். இந்த மனநிலை கொண்டிருப்பதால், இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கப் போகிறீர்கள்’’ என ஆவேசமாகப் பேசினார்.