ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி எந்த உலக தலைவரும் என்னிடம் பேசவில்லை: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மட்டும் பேச முயற்சித்தார், மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி எந்த உலக தலைவரும் என்னிடம் பேசவில்லை. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மட்டுமே பேச முயற்சித்தார். அவரிடம், தோட்டாக்களுக்கு பீரங்கிகள் மூலமே பதிலளிக்கப்படும் என தெளிவாக கூறினோம்’ என மக்களவையில் நடந்த விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான 16 மணி நேர விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்த இவ்விவாதம் நள்ளிரவு 1 மணி வரை நடந்த நிலையில், நேற்று காலை 12 மணிக்கு, கேள்வி நேரத்திற்குப் பிறகு, மீண்டும் தொடர்ந்தது. இதில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பேசினர்.
அவர்கள் போர் நிறுத்தம் ஏன் செய்யப்பட்டது என்றும், யாருடைய அழுத்தத்தால் போர் நிறுத்தம் செய்யப்பட்டது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர் தான் போரை நிறுத்தியதாக கூறுவது குறித்தும், இந்திய விமானங்கள் இழப்பு குறித்தும் சராமரி கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகள் தரப்பில் இறுதியாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசும்போது,’ ராணுவத்தை பயன்படுத்தத் தெரியாத துணிச்சல் இல்லாத பிரதமர் நமக்கு போதாது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பொய்யர் என்றும், இந்தியா-பாகிஸ்தான் போரை அவர் தடுக்கவில்லை என்றும், விமானங்களை இந்தியா இழந்தது என அவர் கூறுவது பொய் என்றும் கூறுவதற்கு தைரியமில்லாத ஒரு பிரதமர் நமக்கு போதாது. இந்திரா காந்தி செய்தது போல, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையை சுதந்திரமாக விடுவித்து ‘போய் வேலையை முடித்து விட்டு வாருங்கள்’ என்று தைரியமாக சொல்லும் ஒரு பிரதமர் இந்தியாவுக்குத் தேவை.
இந்திரா காந்திக்கு இருந்த தைரியத்தில் 50 சதவீதமாவது மோடிக்கு இருந்தால், அவர் நாடாளுமன்றத்தில், ‘டிரம்ப் பொய் சொல்கிறார்’ என சொல்ல வேண்டும்’ என்று பேசினார். விவாதத்தின் நிறைவாக, எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்தது கொடுமையின் உச்சம். அப்பாவி மக்களிடம் அவர்களின் மதம் என்ன என்று கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றார்கள். இது இந்தியாவை, வன்முறை எனும் நெருப்பில் தள்ளுவதற்கான திட்டமிட்ட சதி.
இது இந்தியாவில் கலவரங்களை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட சதி. இந்த சதியை ஒற்றுமையுடன் முறியடித்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி கூறுகிறேன். இந்த அவையில் இந்தியாவின் தரப்பை முன்னிறுத்த நான் இங்கே நிற்கிறேன். இந்தியாவின் பக்கம் என்ன நடந்தது என்பதை பார்க்காதவர்களுக்கு அதைக் காட்ட நான் இங்கே நிற்கிறேன். ஏப்ரல் 22ஆம் தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். பஹல்காம் தாக்குதலை அறிந்தவுடன் நான் நாடு திரும்பினேன். பாதுகாப்புக்கான அமைச்சரவையைக் கூட்டினேன்.
பயங்கரவாதத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றும், இது எங்கள் தேசிய உறுதிப்பாடு என்றும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினோம். ராணுவம் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. எங்கே, எப்போது, எப்படி, எந்த முறையில் தாக்குதலை நடத்துவது என்பதை ராணுவம் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அனைத்தும் தெளிவாகக் கூறப்பட்டன. பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மூளையாக இருந்தவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கு எங்கள் தண்டனை இருந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கும் என்ற எண்ணம் பாகிஸ்தான் படைகளுக்கு இருந்தது. அவர்கள் அணு ஆயுத அச்சுறுத்தல்களை தொடங்கினர். மே 6-7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் திட்டமிட்டபடி நமது ராணுவம் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது ஆயுதப் படைகள் 22 நிமிடங்களுக்குள் துல்லிய தாக்குதல்களை நடத்தி பழிதீர்த்தன. பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மே 9 மற்றும் 10 ஆம் தேதிகளில், எங்கள் ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் தாக்கின,
அவர்கள் கனவிலும் கூட நினைத்திராத ஒன்று. இது பாகிஸ்தானை மண்டியிட வைத்தது. இதன் பிறகுதான் பாகிஸ்தான் இந்திய டிஜிஎம்ஓவை அழைத்து, ‘ இதை நிறுத்துங்கள். நீங்கள் எங்களை கடுமையாக தாக்கியுள்ளீர்கள், இனி எங்களால் அதைத் தாங்க முடியாது. தயவுசெய்து தாக்குதலை நிறுத்துங்கள் என்று கெஞ்சியது. மே 7 ஆம் தேதியே இந்தியா தனது நோக்கங்கள் அடையப்பட்டதாக தெளிவுபடுத்தியிருந்தது. மே 7 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களில், பாகிஸ்தான் இந்தியா மீது 1,000 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது, அவை அனைத்தும் நடுவானிலேயே அழிக்கப்பட்டன.
இதனால் பயங்கரவாதிகள் அழுகிறார்கள், அவர்களின் முதலாளிகளும் ஆதரவாளர்களும் அழுகிறார்கள், அவர்கள் அழுவதைப் பார்த்து, சிலர் இங்கேயும் துக்கப்படுகிறார்கள். காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பிரச்சாரத்தின் செய்தித் தொடர்பாளர்களாக மாறிவிட்டனர். இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது, ஆனால் காங்கிரஸ் இப்போது பிரச்னைகளுக்கு பாகிஸ்தானையே சார்ந்துள்ளது. அணு ஆயுத மிரட்டல் இனி வேலை செய்யாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள், ஏவுகணைகள் பாகிஸ்தானின் ஆயுத அமைப்பை சேதப்படுத்தின. ஆபரேஷன் சிந்தூர் 3 விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்று, இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் நாம் நமது சொந்த முறையில் நமது நேரத்துக்கு ஏற்ப பதிலடி கொடுப்போம். இரண்டு, அணு ஆயுத மிரட்டல் இனி இந்தியாவிடம் வேலை செய்யாது.
மூன்று, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசாங்கங்களையும் பயங்கரவாத அமைப்புகளையும் தனித்தனியாக பார்க்க மாட்டோம் என்பதே . மே 9ம் தேதி இரவு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் என்னை 3-4 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது நான் ஆயுதப்படைகளுடனான சந்திப்புகளில் மும்முரமாக இருந்தேன். பின்னர் நான் அவரை திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தான் பெரிய தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்தார். உடனே அவரிடம் நான், ‘‘பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், எங்கள் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்.
பீரங்கிகளைக் கொண்டு தோட்டாக்களுக்கு பதிலடி கொடுப்போம்’’ என்று சொன்னேன். எனவே, எந்தவொரு உலக தலைவரும் இந்தியாவின் நடவடிக்கையை நிறுத்தச் சொல்லவில்லை. அதுபற்றி என்னிடம் யாரும் பேசவில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை எந்த நாடும் எதிர்க்கவில்லை. ஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே பேசின. இந்தியா முழு உலகத்திலிருந்தும் ஆதரவைப் பெற்றது. ஆனால் காங்கிரஸ் நமது வீரர்களின் வீரத்தை ஆதரிக்காதது துரதிர்ஷ்டவசமானது.
சிந்தூர் முதல் சிந்து நதி நீர் வரை எங்கள் நடவடிக்கைகள் நீடித்தன. எந்தவொரு தவறுக்கும் அவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் இப்போது அறிந்திருக்கிறது. இதற்கு முன், தீவிரவாத தாக்குதல்களுக்காக அவர்களின் சூத்திரதாரிகளுக்கு எதுவும் நடக்காது என்று நினைத்தனர். இப்போது இந்தியா அவர்களைத் தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மே 10 அன்று, பாகிஸ்தானின் ராணுவ வலிமையை அழித்தோம்.
இது எங்கள் பதில் மற்றும் எங்கள் உறுதிப்பாடு. இந்தியாவின் ஒவ்வொரு பதிலும் கடந்த காலத்தை விட பெரியது என்பதை பாகிஸ்தான் கூட இப்போது புரிந்துகொள்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், இந்தியா எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை அது அறிந்திருக்கிறது. ஜனநாயகத்தின் இந்த கோவிலில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
* 1 மணி 42 நிமிடம் பேசினார் மோடி
பிரதமர் மோடி நேற்று முன்தினம் காலை மக்களவைக்கு வந்தார். அப்போது அமளி காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் விவாதம் தொடங்கியது. அப்போது பிரமதர் மோடி அவைக்கு வரவில்லை. நேற்று காலையிலும் அவர் அவைக்கு வரவில்லை. விவாதம் நிறைவை எட்டிய நிலையில் மாலை 5 மணிக்கு அவர் மக்களவைக்கு வந்தார். மாலை 6.15 மணிக்கு பேசத் தொடங்கிய அவர் இரவு 7.57 வரை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் உரையாற்றினார்.
* ஐசியூவில் பாக். விமான தளங்கள்
பிரதமர் மோடி பேசும்போது, ‘‘பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்களும் சொத்துகளும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இப்போது வரை அவர்களின் பல விமான தளங்கள் ஐசியுவில் உள்ளன. பாகிஸ்தானில் பயங்கரவாதத் தளங்கள் அழிக்கப்பட்டன. இது நடக்கும் என யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை. பஹாவல்பூரும் முரிட்கேவும் தரைமட்டமாக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நாம் செய்த தயாரிப்புகள் காரணமாகவே, நமது தாக்குதல்கள் மிகத் துல்லியமாக நடந்தன. இல்லாவிட்டால், நாம் எவ்வளவு இழப்பைச் சந்தித்திருப்போம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார்.
* நேரு மீது பழி
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஏன் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று கேட்பதற்கு முன், காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் . யார் அதை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு தொடங்கி முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் செய்த தவறுகளின் வலியை இந்தியா இன்னும் அனுபவித்து வருகிறது. இந்தியா பாகிஸ்தானின் நிலத்தையும் வீரர்களையும் தங்கள் பிடியில் வைத்திருந்தபோது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் முடியவில்லை.
அதே போல் தான் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா முழு உலகத்திலிருந்தும் ஆதரவைப் பெற்றது, ஆனால் காங்கிரஸ் நமது வீரர்களின் வீரத்தை ஆதரிக்காதது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னை குறிவைத்தனர், ஆனால் அவர்களின் அற்பமான அறிக்கைகள் நமது துணிச்சலான வீரர்களை ஊக்கப்படுத்தாமல் போயின’’ என்றார்.