ஆபரேஷன் சிந்தூர் விவாதம்.. சொற்பொழிவு தேவையில்லை; நேரடியாக பதில் தர வேண்டும்: என்.ஆர்.இளங்கோ பேச்சு!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை; ஒரு வார்த்தையில் டிரம்ப் சொன்னது தவறு என கூற வேண்டும் என திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒன்றிய அரசை வலியுறுத்தின.
இதனை முன்னிட்டு, மக்களவையில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் நேற்று பேசினார். இதேபோன்று பிரியங்கா காந்தி காங்கிரஸ் எம்.பி., மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கனிமொழி திமுக எம்.பி., சு.வெங்கடேசன் எம்.பி, ப.சிதம்பரம் காங்கிரஸ் எம்.பி., ஆ.ராசா திமுக எம்.பி., ஆகியோரும் அவையில் பேசினர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி அவையில் விளக்கம் அளித்தார். பிரதமர் தனது 105 நிமிடம் பேச்சில் டிரம்ப் என்ற பெயரையே சொல்லவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேசினார். அவர் பேசியதாவது;
நாடாளுமன்றத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என நாங்கள் கேட்கவில்லை; ஒரு வார்த்தையில் டிரம்ப் சொன்னது தவறு என கூற வேண்டும். தீவிரவாதிகளை சாக்லேட்டை வைத்து அடையாளம் கண்டதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்?. பஹல்காம் தாக்குதல் தொடர்பான 2 குற்றவாளிகளை 25 நாட்களுக்கு மேலாக காவலில் உள்ளனர். ஸ்ரீநகர் அருகே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்தான் பஹல்காமில் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை கைதானவர்கள் மூலம் உறுதிசெய்திருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து ஏதாவது ஆதாரங்களை சேகரித்துள்ளீர்களா?. அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்ற சொற்றொடரை மேற்கோளிட்டு என்.ஆர்.இளங்கோ பேசினார்.