Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்குவதா? பீகாரில் நடப்பது சீர்திருத்தம் அல்ல, தில்லுமுல்லு, நெருப்புடன் விளையாடாதீர்கள்

* ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் பீகாரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு எதிராக வாக்களிப்பவர்களின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி சாதகமான சூழலை ஏற்படுத்த பாஜ முயற்சிக்கிறது. பீகாரில் நடப்பது சீர்திருத்தம் அல்ல; தில்லுமுல்லு. நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி அந்த மாநிலத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நேற்று அந்தப் பணிகள் நிறைவடைந்தன. சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான புள்ளி விவரங்களையும் வெளியிட்டது. இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம் என்று அவர் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பாஜவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளை திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கையாகும்.

பீகார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது. முன்பு தங்களுக்கு வாக்களித்த அதே மக்களே கூட இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை டெல்லி அணி நன்கு உணர்ந்துள்ளது. அதனால் தான், அவர்கள் வாக்களிக்கவே கூடாது என தடுக்கப் பார்க்கிறது. எங்களை தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்தால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறார்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம்.

முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம். அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், எஸ்.ஐ.ஆர். என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* எங்களை தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்ததால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறார்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்.

* மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும்.

* அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம்.

* எஸ்.ஐ.ஆர். என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது.