Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது: விசாரணையில் அம்பலம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான முகவரியைப் பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கிட்னி திருட்டு கும்பலே போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளது. சிறுநீரகம் தானமாக பெற்றவரின் உறவினர் என இந்த சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீடியோ வெளியிட்ட பெண்ணிடம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல் அருகே கிட்னி திருடப்பட்ட விவகாரத்தில் நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் ஏழைகளை குறி வைத்து கிட்னி பறிப்பு குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், தலைமறைவான இடைத்தரகர் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையிலான சிறப்பு குழு ரகசிய விசாரணை நடத்தி, வீடியோ மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

கிட்னி விற்பனை செய்யலாம் என அணுகியது யார்? எங்கு வைத்து பேரம் பேசப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இதுவரை எந்த மருத்துவமனையிலும் விசாரணை தொடங்கவில்லை என்றும், எந்த மருத்துவமனைக்கும் நோட்டீஸ் கொடுக்கவில்லை என்றும் மருத்துவத்துறை சிறப்புக் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுநீரகம் திருட்டு குறித்து, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.வினீத் இதுகுறித்து விரிவாக விசாரித்து இரண்டு வாரங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நடைபெற்று வரும் விசாரணையில் கிட்னி விற்பனை பணம் பெற்றுக் கொண்டு விற்பனை நடந்ததை விசாரணை குழு உறுதி செய்தது.