Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடிக்கு நாளை வருகை பிரதமர் மோடி, ஓபிஎஸ்சை சந்திக்க எடப்பாடி எதிர்ப்பு

தூத்துக்குடி: பிரதமர் மோடி, நாளை தூத்துக்குடி வரும்போது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்திக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இருவரையும் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்காமல் பிரதமர் அலுவலகம் உள்ளதால் கூட்டணியில் கடும் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இனி தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விமான நிலைய திறப்பு விழா நாளை (26ம் தேதி) இரவு நடக்கிறது. மாலத்தீவு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மோடி நாளை (சனி) அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, ரூ.4500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் விழாவுக்காக விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி விழா நிறைவுற்றதும் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் இரவு தங்கி ஓய்வெடுக்கும் பிரதமர் மறுநாள் 27ம் தேதி (ஞாயிறு) ஹெலிகாப்டரில் காலை 11.10 மணிக்கு அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

மதியம் 12 மணிக்கு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு தான் கொண்டு வந்துள்ள கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார். பின்னர் விழா நடைபெறும் இடத்துக்கு வரும் அவர், அங்கு தொல்லியல் துறையால் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். மேலும் அதன் தொடர்ச்சியாக இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்லும் பிரதமர் பிற்பகல் 2.15 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

தூத்துக்குடிக்கு பிரதமரின் வருகையையொட்டி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, நெல்லை நகரம், குமரி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில், பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட சிறிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்தவுடன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மட்டும் சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் சந்திக்க அனுமதி அளித்துள்ளனர். ஆனால் நாளை, தூத்துக்குடி விமானநிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு அனுமதி அளிக்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்திருந்தது.

இதனால் தற்போது ஜி.கே.வாசன் உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்கள் தூத்துக்குடியில் சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் பிரதமர் அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூட்டணியில் இல்லாதவர்களுக்கு சந்திக்க அனுமதிப்பதன் மூலம் கூட்டணியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். அவர்களும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி என்று கூறுவார்கள். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று இருக்கும்போது அவர்கள் தனி அணியாக இருப்பது எப்படி என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் சந்திக்க அனுமதி அளிப்பதில் பிரதமர் அலுவலகம் கடுமையான குழப்பத்தில் உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது.