100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை : தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு தடுத்து வரும் நிலையில், சிறப்பான செயல் திறனை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதியை முழுமையாக பயன்படுத்தி, இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை சுட்டிக் காட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் தான் அதிகளவு மகளிர் இந்த திட்டத்தின் கீழ் பலன்பெற்றுள்ளனர் என்றும் இதுவும் திராவிட மாடல் அரசின் சிறப்பான ஆட்சிக்கு ஒரு சான்று என்றும் தெரிவித்துள்ளார். இது போன்று பல சாதனைகளை செய்து காட்டிய போதும், தமிழ்நாட்டிற்கான நிதியை வழங்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருவதாக கூறியுள்ள அமைச்சர் ராஜா, வேலையை வழங்குவது மட்டுமின்றி, முதலீடுகளை பெறவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது திராவிட மாடல் அரசு என கூறியுள்ளார். இது தான் பெரியார் வழி, பேரறிஞர் வகுத்த கலைஞரின் பாதை, வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும் அந்த பதிவில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.