மாஞ்சோலை தொடர்பான வழக்கு : 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாஞ்சோலை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசு என்ன விதமான நடவடிக்கை எடுக்க போகிறது. அது எந்த மாதிரியானது என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக விரிவிக்க வேண்டும்’ என கேள்வியெழுப்பி இருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விகரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சப்ரீஸ் சுப்ரமணியன், ‘மாஞ்சோலை விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் அங்கு இருப்பவர்கள் கேட்டதை விட அதிகமாகவே மாநில அரசு தரப்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 400 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான பிரமாணப் பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலை பகுதியில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பாக ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எங்களிடம் கேட்டறிந்துள்ளார்’ என்று தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘மாஞ்சோலை விவகாரத்தில் ஒன்றிய அரசு இரண்டு வாரத்தில் விரிவான விவரங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கின் விசரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.