Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

புதுடெல்லி: 2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டிய மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு 3ம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநில வாரியாக பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், அரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

தொடர்ந்து நாளை மறுநாள் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை 6 மணியுடன் பிரசாரங்கள் முடிவுக்கு வந்தது. உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), மற்றும் இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்) என 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்கள் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகள் உள்ளன. மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உ.பி.யை விட்டு கொடுக்க மாட்டார்கள். எனவே பாஜ சுற்றி சுற்றி இங்கு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் அடங்கும். இந்த தொகுதியில் பிரதமர் மோடி 3வது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் போட்டியிடுகிறார். பிரதமரே போட்டியிடுவதால் வாரணாசி தொகுதியை உலகமே கவனிக்கிறது.

பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. மீதமுள்ள 8 தொகுதிகளில் பாஜ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மியை முடிவுக்கு கொண்டு வர பாஜ திட்டம் வகுத்து களமாடி வருகிறது. இருப்பினும் ஆம் ஆத்மி எதிர்த்து போராடி வருகிறது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இது திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படியாக தேர்தல் ஜூரம் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த பரபரப்புகள் இன்றுடன் நிறைவடைந்தன.