Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2ம் கட்ட மக்களவை தேர்தல்; 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது: ராகுல், ஓம்பிர்லா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்

புதுடெல்லி: மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் தொடங்கியது. இதில் ராகுல், ஓம்பிர்லா, சசிதரூர், குமாரசாமி, ஹேமமாலினி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது.

2ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் ஏப்.26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பாலவி இறந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் மே 7ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீதம் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த 88 தொகுதிகளில் மொத்தம் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 1098 ஆண்கள், 102 பேர் பெண் வேட்பாளர்கள்.

புறநகர் மணிப்பூர் தொகுதியில் மட்டும் 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா போட்டியிடும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி, ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் போட்டியிடும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் போட்டியிடும் கேரள மாநிலம் ஆலப்புழா, சசிதரூர், ஒன்றிய அமைச்சர் ராஜீவ்சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் திருவனந்தபுரம்,

நடிகர் அருண் கோவில் போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதி, கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிடும் பெங்களூர் புறநகர், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடும் மண்டியா, நடிகை ஹேமமாலினி போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதிகள் முக்கிய தொகுதிகளாக உள்ளன.

இன்று தேர்தல் நடக்கும் 88 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் அனைத்து பூத்களிலும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் ஓட்டுப்பதிவு குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வெயிலை சமாளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பூத்களில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.