Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த இந்தியா.. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 64 கோடி மக்கள் வாக்களித்து உலக சாதனை : தேர்தல் ஆணையம் பெருமிதம்!!

டெல்லி : மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் அளித்த பேட்டியில்,"கடந்த மார்ச் 16ஆம் தேதி நாம் சந்தித்தோம். இப்போது வாக்கு எண்ணிக்கை சமயத்தில் சந்திக்கிறோம். தேர்தல் தொடர்பாக இதுவரை இல்லாத வகையில் 100 செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளோம். 7 கட்டங்களாக மக்களவை தேர்தலை அமைதியாக நடத்தி முடித்துள்ளோம். தேர்தலில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.வீடுகளில் இருந்தபடியே வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி.

64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக சாதனை படைத்துள்ளோம். தேர்தல் ஆணையர்களை காணவில்லை என சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியாகின; நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் பெண் வாக்காளர்கள் மட்டும் 31 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.(வாக்களித்த பெண்களை கவுரவிக்கும் வகையில் எழுந்து நின்று தேர்தல் ஆணையர்கள் பாராட்டு தெரிவித்தனர்). ஜி7 நாடுகளின் ஒட்டுமொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட இந்தியாவில் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 1.75 மடங்கு அதிகம் ஆகும்.

மக்களவை தேர்தலையொட்டி, 135 சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. 1,692 வான்வெளியில் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.68,793 கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டது, 1.5 கோடி தேர்தல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம் கடும் சவால்களை சந்தித்து தேர்தலை நடத்தியுள்ளது, சிலர் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பது சரியா?.தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகளால் வெறும் 39 இடங்களில் மட்டுமே மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத வகையில் அதிகமாக வாக்குப்பதிவு நடந்தது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இன்றி வரக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.நக்சல் பாதிப்புகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் கூட அதிக வன்முறை இன்றி தேர்தல் நடத்தப்பட்டது.

7 கட்ட தேர்தலின்போது ரூ.10,000 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டன.ரூ.4391 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் தேர்தலின்போது கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 4.56 லட்சம் புகார்கள் வரப்பெற்றன. அரசியல் கட்சிகளின் உயர் தலைவர்களுக்கு எதிராகவே நோட்டீஸ் -அனுப்பி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. ,"இவ்வாறு தெரிவித்தனர்.