Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: நெல்லை காவல் ஆணையர் உத்தரவு..!!

நெல்லை: இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்களத்தை சேர்ந்தவர் ஐ.டி ஊழியர் கவின்(25) சென்னையில் மிக பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கவின் அந்த பெண்ணை சந்திப்பதற்காக வந்துள்ளார். இந்த தகவல் கவின் காதலிக்கக்கூடிய பெண்ணின் சகோதர் சுர்ஜித்திற்கு தெரியவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில்வாலிபர் கவினை வெட்டி படுகொலை செய்தார். படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சுர்ஜித் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் கவினின் உடலானது திங்கள் கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சொந்தமான பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கவினின் இறப்பு சம்மந்தமாக கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி இருவருமே காவல்துறையில் உதவி சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரால் இந்த படுகொலை நடைபெற்றதாக கவின் தரப்பினர் புகார் அளித்த நிலையில் அந்த தம்பதிகள் மீது 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இருவரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் 3வது நாளான இன்றும் இறந்த கவினின் உடலை உறவினர்கள் பெற்று கொள்ளவில்லை.

தொடர்ந்து நேற்று இரவு 4 மணி நேரமாக காவல்துறையினர் கவினின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில், இன்று நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார். மேலும், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் சரவணன், கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்தால் மட்டுமே அவரது உடலை பெற்று கொள்வோம் என்று கவினின் உறவினர்கள் திட்டவட்டமாக இருப்பதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.