சென்னை: கல்வி எனும் ஒளி, இருளை கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்தியவர் காமராசர் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழை போற்றி வருகின்றனர். இந்நிலையில், காமராசரின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது;
பிரதமர் மோடி:
கே.காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்.
கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்திக் காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று!. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி:
எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை - எளிய பிள்ளைகள் எல்லோருக்கும் சென்று சேர பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்ட காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
காமராஜர் வாழ்ந்த தியாகராய நகர் இல்லத்தை புதுப்பிப்பதோடு, அவர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திருச்சியில் அமைக்கிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
காமராஜர் கண்ட கல்விக்கனவுகளை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன் போன்ற திட்டங்களின் வழியே நனவாக்கி வருகிறது நம் திராவிட மாடல் அரசு!
பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் வழிகாட்டும்.
அவர் புகழ் ஓங்கட்டும்!.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:
இன்று, இந்தியாவின் உண்மையான மகனும், அவரது முன்னோடி சமூக நல முயற்சிகளுக்காக தமிழக மக்களால் போற்றப்படும்வருமான கே.காமராஜருக்கு நமது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம்.
சுதந்திர இயக்கத்தின் உயர்ந்த மனிதர்களில் ஒருவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான காமராஜர், சமூக நீதிக்கான அயராத போராளியாக இருந்தார்.
அவரது தொலைநோக்கு பார்வை கொண்ட மதிய உணவுத் திட்டம், தடைகளைத் தகர்த்தெறிந்து, பின்தங்கியவர்களுக்கு கல்வியை எட்டக்கூடியதாக மாற்றும் ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாக நின்றது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கம் இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.
அவரது நீடித்த மரபை நாங்கள் மதிக்கிறோம். மக்களின் நலனுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், அவரது உணர்திறன் மிக்க, பதிலளிக்கக்கூடிய நிர்வாகத்தையும் கொண்டாடுகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.