“நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் நடந்தது என்ன?” : ஜெகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்!!
புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமாவின் பின்னணியில் ஏதோ ஒரு பெரும் விஷயம் நடந்திருக்கலாம் என்று காங்கிரஸ் சந்தேகித்துள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் பதவி ஏற்றார். அவையிலும், அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களுக்கும் மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கும் பலமுறை கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை வழிநடத்தினார். இந்த சூழலில் நேற்று இரவு துணை ஜனாதிபதி உடல் நலக்குறைவால் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், "நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை.அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்று பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார்.நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.