சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற புத்தாக்க கண்டுப்பிடிப்பு கண்காட்சி மற்றும் பரிசு வழங்கும் விழாவானது அண்ணாப்பல்கலைக்கழக விவேகானந்தர் கூட்டரங்கில் நடைப்பெற்றது. விழாவில் வெற்றி பெற்ற 50 பள்ளி மாணவர் அணிகளுக்கு ரூ.31.25 லட்சம் பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கி பாரட்டுகளை தெரிவித்தார். தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை முதமைச்சரால் 2022 ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 8074 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின்சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆதுல் ஆனந்த் கூடுதல் முதன்மை செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, அவர்கள் தலைமையில், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெற்றிப்பெற்ற 50 பள்ளி மாணவர் அணிகளுக்கு ரூ.31.25 இலட்சம் பரிசுத் தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
2024-25 ஆம் ஆண்டிற்கான பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று முதல் இடம்பிடித்த 20 அணிகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம், ரூபாய் இருபது லட்சமும் , இரண்டாம் இடம் பெற்ற 15 கண்டுபிடிப்புக்களுக்கு தலா ருபாய் ஐம்பதாயிரம் வீதம், ரூபாய் எழு லட்சத்து ஐம்பதாயிரமும், மூன்றாவது இடம் பெற்ற 15 கண்டுபிடிப்புக்களுக்கு தலா ருபாய் இருபத்தைந்தாயிரம் வீதம், ரூபாய் மூன்று லட்சத்து ஏழுபத்திஐந்தாயிரமும் ஆக மொத்தம் ரூபாய் 31.25 லட்சம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது.மேலும் புத்தாக்க பற்றுசீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் 15 நிறுவனங்களுக்கு ரூ.19.23 லட்சம் நிதி விடுவித்தார். தொடர்ந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கான " நிமிர்ந்துநில்" திட்டத்தினை தொடங்கிவைத்ததோடு மாவட்ட மையங்களுக்கான அனுமதி சான்றிதழ்களும், அறிவுசார் பங்கு நிறுவனங்களுக்கான சான்றிதழ்களும் வழங்கியதோடு, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகர மக்கள் 9000 பேருக்கு திறனுடன் கூடிய தொழில்முனைவோர் பயிற்சித்திட்டத்தினையும் தொடங்கிவைத்தார்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசுகள் வழங்கி பேசுகையில்; பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களிடையே தொழில்முனைவு மற்றும் புத்தாக்க கலாச்சாரம் விதைக்கப்பட்டு, மேலும் புத்தாக்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையின் கீழ் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகின்றது. குறிப்பாக தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 71 ஆயிரத்து 735 நபர்களுக்கு தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் 21 இலட்சத்து 86 ஆயிரம் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கும், புத்தாக்க தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 40 ஆயிரத்து 820 கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாகவும், அவற்றை தயாரித்து -சந்தைப்படுத்த வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 470 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ. 12 கோடியே 10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்க்கான சிந்தனையை ஊக்குவிக்க, தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது (TNYIEDP), “நிமிர்ந்து நில்” என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 2000 உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பயனடைய உள்ளனர். அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 19.57 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்மூலம் 5 ஆண்டுகளில் 30 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்முனைதல் மற்றும் புத்தாக்கம் குறித்தும் விழிப்புணர்வுகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மாநிலத்தில் 2-ஆம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் உள்ள 9000 பயனாளிகளுக்கு திறனுடன் கூடிய தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரூ. 2.7 கோடி மதிப்பீட்டில் இளைஞர்கள், பெண்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமுதாயத்தில் நலிவுற்ற மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். மேலும் மின்வணிகம், அடுமனைப்பொருட்கள் தயாரிப்பு, தங்க மதிப்பீட்டாளர், செயற்கை நுண்ணறிவு உட்பட 16 க்கும் மேற்பட்ட திறனுடன் கூடிய தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர், ரா.அம்பலவாணன், EDIIயின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து வரவேற்புரையாற்றினார், பள்ளி கல்வி இணை இயக்குநர், ராமகிருஷ்ணன் , யுனிசெப் (UNICEF) பிரதிநிதி மானசா வாசுதேவன், ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன துணை இயக்குநர் கமலக்கண்ணன் நன்றியுரையாற்றினார், இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்களும் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள், கல்லூரி மாற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.