Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவிற்கு அதிகளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து 6 மாதத்தில் ரூ.4.41 லட்சம் கோடியை குவித்த ரஷ்யா: அமெரிக்காவின் கண்ணை உறுத்துவதால் கடுப்பாகும் டிரம்ப்

புதுடெல்லி: உக்ரைன் போருக்குப் பிறகு குறைந்த விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து பல லட்சம் கோடி ரூபாயை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதனை பொறுக்கமாட்டாத அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிராக புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 1992ம் ஆண்டு முதலே ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும், 2022ம் ஆண்டில் உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு வரை இறக்குமதியின் அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. அதிகப்படியான சரக்கு போக்குவரத்து செலவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் மீதான சார்பு ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. கடந்த 2020ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு வெறும் 2% மட்டுமே இருந்தது. அப்போது, சுமார் 2.5

மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய், அதாவது ரூ.16,700 கோடி மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டது.

ஆனால் 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால், ரஷ்யா தனது கச்சா எண்ணெய்யை பீப்பாய்க்கு 18 முதல் 20 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்கத் தொடங்கியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தனது இறக்குமதியை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது. கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் 4.7 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய், அதாவது ரூ.82,414 கோடி மதிப்பில் இறக்குமதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 2023ம் நிதியாண்டில் இறக்குமதி 13 மடங்கு அதிகரித்து, 49.4 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. இதன் மதிப்பு ரூ.2,58,850 கோடியாகும். இந்த உயர்வானது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 21.5% ஆகும். அதேபோல் 2024ம் நிதியாண்டில் இந்தியா 83.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ₹11,05,140 கோடி மதிப்பில் இறக்குமதி செய்தது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36% ஆக உயர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா உருவெடுத்தது.

நடப்பு 2025ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல் - செப்டம்பர் 2024), இந்தியா சுமார் 47.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை ரூ.4,40,295 கோடி மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. இது மொத்த இறக்குமதியில் 35% ஆகும். குறிப்பாக, செப்டம்பர் 2022ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 1.9 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் இறக்குமதி செய்யப்பட்டு, மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 40% ஆக உயர்ந்தது. இந்த இறக்குமதி உயர்வுக்கு, ரஷ்யாவின் உரல்ஸ், சோகோல் போன்ற எண்ணெய் வகைகள் இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஏற்றதாக இருப்பதும் முக்கிய காரணமாகும். இந்த வர்த்தகத்தின் மூலம், 2024ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவுக்கு ₹87,675 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ், நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமீபத்தில், அமெரிக்காவின் 25% வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் தள்ளுபடி குறைவு காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்த ஒன்றிய அரசு, எண்ணெய் சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே முடிவுகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 2024ம் நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவுக்கு (36%) அடுத்தபடியாக ஈராக் (20%), சவுதி அரேபியா (11%) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (6%) ஆகிய நாடுகள் உள்ளன. ரஷ்ய எண்ணெயை நம்பியிருக்கும் சூழலில், அமெரிக்காவின் ‘ரஷ்யா தடை மசோதா 2025’ மற்றும் 25% வரி விதிப்பு அச்சுறுத்தல், இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்புக்குச் சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் திறன் கொண்டது என ஒன்றிய பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிந்தைய உலக அரசியல் சூழல், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவுக்கு முக்கியப் பங்கை வழங்கியுள்ளது. பொருளாதார நன்மைகளைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த வர்த்தகத்தைத் தொடர்ந்தாலும், அமெரிக்கத் தடைகள் மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்கள் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி உத்திகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றே கூறுகின்றனர். கடைசியாக நடப்பு 2025ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (2024 செப். முதல் 2025 பிப்.) இந்தியா சுமார் 47.7 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை அதாவது ரூ.4,40,295 கோடி மதிப்பில் அளவில் ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது அளவானது மொத்த இறக்குமதியில் 35% ஆகும். இவ்வளவு பெரும் தொகைக்கு ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி இருக்கும் நிலையில், அதனை பொறுக்கமாட்டாமல் இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.