Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடிக்கு ரஷ்யா பதிலடி; மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு நெருக்கடி?

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா விரும்பாததால் 25% வரி விதித்துள்ள நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ரஷ்ய எல்லைக்கு அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மூன்றாம் உலகப் போர் வெடிக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு உயரதிகாரிகள் முன்னர் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது 25% கூடுதல் இறக்குமதி வரியுடன், அபராதமும் விதிக்க அமெரிக்க அதிபர் புதன்கிழமை அன்று அறிவித்தார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும் என்றும் ஏற்கனவே டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் மட்டுமின்றி ராணுவத் தளவாடங்களையும் இந்தியா வாங்கி வருகிறது. இதுவும் டிரம்புக்கு பிடிக்கவில்லை. மேலும் அமெரிக்காவின் விவசாய மற்றும் பால் பண்ணைப் பொருட்களுக்கு இந்திய சந்தையைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. ஆனால், கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து வந்தது. உக்ரைன் மீது போரை தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கி, அதன் வருவாயை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை இந்தியா வாங்குவதால், ரஷ்யாவை தனது வழிக்கு கொண்டு வரமுடியாமல் டிரம்ப் தவித்து வருகிறார். தற்போது இந்தியா மீது 25% வரிவிதிப்பு விதித்தது மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை ‘செத்த பொருளாதாரம்’ (வீழ்ச்சியடைந்த பொருளாதாரம்) என்று கடுமையாக விமர்சித்துள்ளார். வர்த்தகப் போர் நடவடிக்கையுடன் நிறுத்திக்கொள்ளாத டிரம்ப், ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான டிமிட்ரி மெத்வதேவை, ‘தோல்வியடைந்த முன்னாள் அதிபர்’ எனக் குறிப்பிட்டு, அவர் மிகவும் ஆபத்தான எல்லைக்குள் நுழைவதாகவும் பகிரங்கமாக எச்சரித்தார். டிரம்பின் இந்தத் தனிப்பட்ட தாக்குதலுக்கும், பொருளாதாரத் தடைக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், டிமிட்ரி மெத்வதேவ் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். தனது டெலிகிராம் பக்கத்தில், பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட ‘டெட் ஹேண்ட்’ என்றழைக்கப்படும் தானியங்கி அணு ஆயுத பதிலடி அமைப்பை அவர் நினைவு கூர்ந்தார்.

ரஷ்யத் தலைமை முற்றிலுமாக அழிக்கப்பட்டாலும் கூட, எதிரி நாட்டின் மீது தானாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கொடூரமான அமைப்பை அவர் சுட்டிக்காட்டியது, அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி அணு ஆயுத மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. டிமிட்ரி மெத்வதேவின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ராணுவ ரீதியிலான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்ற டிரம்ப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ரஷ்யாவின் முட்டாள்தனமான மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய எல்லைப் பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் - அமெரிக்க அதிபர் இடையிலான வார்த்தைப் போர், தற்போது அமெரிக்கா - ரஷ்யா இடையிலான ராணுவ மோதலாக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த இரு வல்லரசுகளின் மோதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாகச் சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலை வரவேற்றுள்ள ரஷ்யா இடையிலான ராணுவ மோதலாக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இரு வல்லரசுகளின் மோதலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாகச் சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தத் தகவலை வரவேற்றுள்ள டிரம்ப், ‘அது உண்மையா எனத் தெரியவில்லை, ஆனாலும் இது ஒரு நல்ல நடவடிக்கை’ என்று கூறியுள்ளார். ஆனால், இந்திய அரசு இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது.தற்போது சர்ச்சையின் மையத்தில் சிக்கியுள்ள இந்தியா, தனது ராஜதந்திர நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான உறவு, ‘காலத்தால் தொடரும் நிலையான நட்பு’ என்றும், அதே சமயம் அமெரிக்காவுடனான உறவு ‘ஜனநாயக அமைப்பு மற்றும் வலுவான மக்கள் தொடர்பு’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இரு நாடுகளுடனான உறவையும் சமமாகப் பேணி, ராஜதந்திர கயிற்றின் மேல் நடக்கும் சவாலான சூழலில் இந்தியா உள்ளது.

இதுகுறித்து புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘அமெரிக்கா - ரஷ்யா இடையிலான மோதல் நேரடிப் போராக மாற வாய்ப்பு குறைவு எனக் கருதினாலும், தவறான கணிப்புகளோ அல்லது எதிர்பாராத சம்பவங்களோ பதற்றத்தை தீவிரப்படுத்தக்கூடும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும் அதேவேளையில், இரு அணு ஆயுத வல்லரசுகளின் இந்த அதிகாரப் போட்டி, உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், மூன்றாம் உலக போராக வெடிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று கூறினர்.

புதிய வரியால் 0.2% மட்டுமே பாதிப்பு;

இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 25% கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், இந்த வரி விதிப்பால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு 0.2 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றும், இது சமாளிக்கக்கூடியதே என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து விவசாயம், பால் பண்ணைச் சந்தைகளைத் திறக்கப் போவதில்லை என்றும், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், மாட்டிறைச்சி அல்லது விலங்கு சார்ந்த பொருட்களை உண்டு வளர்க்கப்பட்ட பசுக்களின் பாலை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் ஒன்றிய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 25% புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டபோதிலும், அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் முன்னேறி வருவதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகத் திகழ்கிறது. வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட பின்னரே, 25% வரி விதிப்பு குறித்த மறுஆய்வு மேற்கொள்ளப்படும். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் இடைக்கால ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த வரி விதிப்பு வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.