மாலத்தீவு: பிரதமர் மோடி , மாலத்தீவு அதிபர் முகமது முய்க முன்னிலையில் இந்தியா-மாலத்தீவுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா நிதியுதவியுடன் மாலத்தீவு ஹுல்ஹுமாலேயில் 3,300 வீடுகள், அட்டு நகரில் சாலைகள் மற்றும் வடிகால் திட்டம் தொடக்கம். இந்தியா-மாலத்தீவு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க இருநாடுகளும் சம்மதம். இந்திய அரசு மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு
72 கனரக வாகனங்களை வழங்குகிறது.
பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் சார்லசை பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு மாலத்தீவு புறப்பட்டார். அவர் இன்று தனி விமானம் மூலம் மாலத்தீவு சென்றடைந்தார். 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். முன்னதாக மாலத்தீவின் மாலேவில் உள்ள குடியரசு சதுக்கத்தில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் பிற அதிகாரிகளை முகமது முய்சு சந்திக்கிறார். அவர்களை முகமது முய்சுவிற்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து நாளை நடைபெறும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையடுத்து, மாலத்தீவு பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை மாலை டெல்லி திரும்புகிறார்.